Latest News

வாட்ஸ்ஆப்: உங்களால் இனி எவ்வளவு செய்தி அனுப்ப முடியும்?

இந்தியாவில் ஒரு செய்தியை வாட்ஸ்ஆப் மூலம் எத்தனை முறை பிறருக்கு அனுப்பலாம் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் மூலம் போலிச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பரவிய செய்திகளால் இந்தியாவில் சமீபத்தில் கும்பல் கொலைகள் நடக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

போலிச் செய்திகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று மத்திய அரசு வியாழன்று அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
சுமார் 20 கோடி பயனாளிகளுடன் இந்தியா வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு உலகிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.
உலகில் உள்ள வேறு நாடுகளின் பயனாளிகளைவிட இந்தியர்கள் அதிக அளவில் செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் அதிகபட்சம் 256 உறுப்பினர்கள் இருக்கலாம். அத்தகைய குழுக்களில் பகிரப்பட்ட தகவல்கள் வன்முறைக்கு வித்திட்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் 100க்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சோதனை முயற்சி வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இந்தியாவில் செய்திகளை பிறருக்கு அனுப்பும் கட்டுப்பாடுகள் இன்னும் கூடுதலாக உள்ளன. ஒரு நபர் ஒரு செய்தியை ஐந்து குழுக்களுக்குதான் அனுப்ப முடியும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். இது தனிநபர்களுக்கு செய்தி அனுப்புவதில் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காது.
ஒரே செய்தி அடிக்கடி பகிரப்படுவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கருதுகிறது. 

படங்கள் மற்றும் காணொளிகளுக்கு அருகில் இருக்கும் 'ஃபார்வார்டு' செய்வதற்கான பொத்தானை அகற்றப்போவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

ஏப்ரல் 2018 முதல் வாட்ஸ்ஆப் மூலம் பரவிய வதந்திகளால் இந்தியா முழுவதும் 18 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ள பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குழந்தை கடத்தல் தொடர்பாக பரவிய வதந்திகளால், அறிமுகமில்லாதர்வர்களை மக்கள் தாக்கத் தொடங்கினார்கள். அந்தச் செய்திகள் உண்மையல்ல என்பதை மக்களுக்கு புரிய வைப்பது கடினமாக உள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர். 

இத்தைகைய வன்முறைச் சம்பவங்களால் தாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது. "அரசு, சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இவற்றைத் தடுக்க வேண்டும்," என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ்ஆப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த எளிதில் குழுக்களில் இருந்து வெளியேறுவது, பிறரைத் தடை செய்வது உள்ளிட்டவற்றை இந்த மாதத் தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்தது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.