கும்பகோணம்: ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்து
வருகிறது என்றும், நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட
மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதித்துள்ளது என்றும் திராவிடர் கழகத்
தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பெரியார்
அனுமதி பெற்று 1943 ஆம் ஆண்டு திராவிட கழகம் சார்பில் திராவிடர் மாணவர்
கழகம் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்து
தன்னுடைய பவள விழாவை கொண்டாடுகிறது. இந்த பவள விழாவில் தமிழ்நாடு முழுவதும்
உள்ள திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
மத்திய அரசு மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய வகையில் பணிகளை
செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
என்பதற்காக பல்வேறு அம்சம் திட்டம் என்று கூறி வேதங்கள் மற்றும் பழைய
புராணங்கள் முன்னிலை படுத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் சில புதிய
திட்டங்களை அறிவிக்க உள்ளோம். நீட் தேர்வை மாநிலப் பட்டியலில் இணைக்க
வேண்டும். தற்போதைய நீட் தேர்வு தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. அனைத்து
மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை வெகுவாக
பாதித்துள்ளது. அதனால், நீட் தேர்வு மற்றும் கல்வித்துறையில் இருக்கக்கூடிய
ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம்
மிகப்பெரிய பிரசாரத்தை நடத்த உள்ளது.
அரசியல் சட்டத்தையே தற்போது
அரசு மதிப்பதாக தெரியவில்லை. மாநிலத்தில் ஆளுநருடைய ஆட்சி இருந்தால்
மட்டுமே ஆளுநருக்கு வேலை. அல்லது நெருக்கடி நிலை ஏற்படும்போது டெல்லிக்கு
தகவல் கொடுப்பது மட்டும் தான் அவருடைய வேலை. ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று
போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல.
ஒரு எம்.எல்.ஏ கூட
இல்லாமல் தமிழகத்தில் பாஜக தற்போது ஆட்சி செய்து வருகிறது. பசுமை
வழிச்சாலையால் யாருக்கு பலன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment