சென்னையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையின்
ஈக்காட்டுத்தாங்கல், நெசப்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த
சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போயின. இதுதொடர்பாக
காவல்நிலையங்களில் புகார்கள் குவிய குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர்
மும்முரம் காட்டி வந்தனர்.
இருப்பினும் குற்றவாளிகளைப் பிடிக்கத் தடயங்கள் எதுவும் இல்லாததால்
காவல்துறையினர் சிரமப்பட்டு வந்தனர். காவல்துறையினருக்கு கிடைத்த ஒரே தகவல்
திருடப்படுவது அனைத்தும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் புதிதாக
வாங்கப்பட்டு பதிவு செய்யப்படாத வாகனங்கள் என்பதுதான்.
இந்நிலையில்
எம்.ஜி.ஆர் நகரின் உள்ள ஒரு வீட்டில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த
காவல்துறையினர், அதில் இரண்டு நபர்கள் வாகனங்களை திருடிச்செல்லும்
காட்சிகளை கண்டனர். அதனை வைத்து காவல்துறை பதிவில் ஆராய்ந்த போது, அதில்
இருப்பது இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளான
விஜயகுமார் மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜயக்குமாரை
கைது செய்ய விரைந்த காவல்துறையினர், அவர் வீடு மாறிச்சென்றதால் அசோக்கை
தேடிச்சென்றனர். அசோக் தனது சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலுக்கு
சென்றுள்ளதை அறிந்த காவலர்கள், அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
அவரின்
மூலம் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மணவாளன், சுஷிவன்,
ராஜ்மோகன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாங்கள் இரவு நேரங்களில் மட்டும்
திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தனர். தங்களை இந்தத் திருட்டு
சம்பவத்திற்கு தூண்டியது விஜயகுமார்தான் என்றும், தாங்கள் மர வேலை
செய்பவர்கள் என்றும் கூறினர். குறிப்பாக விலை உயர்ந்த மற்றும் பதிவு
செய்யப்படாத புதிய இருசக்கர வாகனங்களை மட்டுமே திருடியதாகவும்,
காவல்துறையினரிடம் பிடிபடமால் இருக்கவே இப்படி செய்ததாகவும் அவர்கள்
கூறியுள்ளனர்.
இவர்கள்
திருடிய இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானவை ராய்ல் என்ஃபீல்ட் பைக்குகள்.
அதற்கு அடுத்தபடியாக எஃப்இசட், ஃபேஸர், பல்சர் உள்ளிட்ட இருசக்கர
வாகனங்களை திருடியுள்ளனர். திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை விஜயகுமாரின்
ஊரான அரியலூருக்கு ஓட்டிச்சென்று அங்கு குறைந்த விலைக்கு விற்றதையும் 4
பேரும் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் திருடிய 24
இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அத்துடன் இது
குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான
விஜயகுமாரையும் தேடி வருகின்றனர்.
தகவல்கள் : ஆனந்தன்,செய்தியாளர்-சென்னை
No comments:
Post a Comment