வேதாந்தா நிர்வாகத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை
நிர்வாக அதிகாரி ராம்நாத் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கு நிருபர்கள்
அவரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடியில் நிகழ்ந்த
கலவரம் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில்
தற்போது போராட்ட அனல் வீசி வருகிறது. அந்த அனல் ஓய்ந்த பிறகு நாங்கள் சட்ட
ரீதியான நடவடிக்கையை எடுப்போம். அந்த பகுதி மக்களுக்கும்,
அரசாங்கத்துக்கும் எங்களை பற்றி தவறான செய்திகள் தரப்படுகின்றன. தமிழக அரசு
எங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த
உண்மைகளை விரைவில் மக்களிடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். எங்கள் நிறுவனம்
எப்போதும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கும்.
எங்கள்
மீது உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் எங்கள் ஆலையில் இருந்து வெளிவரும்
சல்பர் டை ஆக்சைடு அமிலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பதுதான்.
உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் எதையும் நாங்கள் காற்றில்
கலக்க விடுவது இல்லை. தூத்துக்குடி பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்களில்
சல்பர் டை ஆக்சைடு அமிலம் மிகவும் அதிகமாக உள்ளது.
எங்கள்
ஆலையில் கழிவாக வெளியேறும் கந்தக அமிலத்தை நாங்கள் வணிக ரீதியாக மாற்றி
அதை நாங்கள் விலைக்கு விற்கிறோம். அதை நாங்கள் காற்றில் கலக்க விடுவது
இல்லை. அதனை விற்று காசாக்குகிறோம்.
ஆனால் கந்தக
அமிலத்தை அதிகமாக வெளியிடும் அனல் மின்நிலையங்கள் அதனை வர்த்தக ரீதியாக
விற்பது இல்லை. காற்றில் கலக்க விடுகின்றன. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை
காட்டிலும் அதிகமான சுற்றுச்சூழல் மாசு இந்த அனல் மின்நிலையங்களால்தான்
ஏற்படுகின்றது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவினால் புற்றுநோய் ஏற்படும் என்பது தவறான செய்தி ஆகும்.
எங்கள் ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து மறு உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறோம்.
எங்களுக்கு
எதிராக மிகவும் தவறான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. அப்பாவி
பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். சமூக விரோதிகளும்,
வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் சில தொண்டு நிறுவனங்களும்
எங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து நாட்டில் கலகம் விளைவிக்கிறார்கள்.
எங்களுக்கு
எதிரான பொய்ப்பிரசாரங்களை முறியடித்து பிரச்சினையை சட்டரீதியாக அணுகி,
ஸ்டெர்லைட் ஆலையை ஒருசில மாதங்களில் மீண்டும் திறப்போம்.
இவ்வாறு தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறினார். அப்போது ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment