நீட் தேர்வில் பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 720-க்கு 691
மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி
மற்றும் போட்டி தேர்வுகளில் பின்தங்கிய மாநிலமான பீகாரில் இருந்து மாணவி
ஒருவர் முதலிடம் பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கல்பனா
குமாரிக்கு பல்வேறு நிலைகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. இதற்கிடையே
பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில்
500-க்கு 433 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பிரிவில் கல்பனா குமாரி மாநில
அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இப்போது கல்பனா குமாரி குறித்து புதிய
சர்ச்சை வெளியாகி உள்ளது.
கல்பனா குமாரி இரண்டு
ஆண்டுகளாக டெல்லியில் நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில்
படித்துவந்து உள்ளார். ஆனால் போதிய வருகைப்பதிவு இல்லாமல் மாநிலத்தில்
தேர்வு எழுதியுள்ளார். பிளஸ் 2 தேர்வுக்கு போதிய வருகைப்பதிவு இல்லாத
நிலையில் விதியை மீறி தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சர்ச்சை
எழுந்து உள்ளது.
டெல்லியில் தங்கி தனியார்
பயிற்சி மையத்தில் நீட் தேர்விற்காக கவனம் செலுத்திய கல்பனா குமாரி, பிளஸ் 2
தேர்வை பற்றி அதிகம் கவலைப்படவில்லை. மேலும், பீகாரில் உள்ள பள்ளிக்கு
செல்ல முடியாத சூழல் இருந்து உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள
பள்ளியில் 75 சதவித வருகைப்பதிவு கட்டாயமாகும், ஆனால் பள்ளிக்கு சரியாக
செல்லாத கல்பனா குமாரிக்கு சிறப்பு வசதி வழங்கப்பட்டு உள்ளது.
பீகார்
மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வை எழுத தேவையான அதிகப்பட்ச வருகைப்பதிவு
தொடர்பான கேள்விக்கு கல்வித்துறை சேர்மன் பதிலளிக்கவில்லை, ஆனால் வாரியம்
தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், “பீகார் தேர்வு வாரிய விதிமுறை
புத்தகத்தில் வருகைப்பதிவு தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை,” என
கூறிஉள்ளார். அம்மாநில கல்வி அமைச்சர் கிருஷ்ணாந்த் வர்மா பேசுகையில்,
கல்பனா குமாரி பீகாருக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்து உள்ளார். அதை
அனைவரும் பாராட்ட வேண்டும். மாறாக வருகைப்பதிவு குறித்து சர்ச்சை
எழுப்புவது தேவையில்லாதது. உரிய விதிமுறைகளை பின்பற்றியே தேர்வு எழுத
அனுமதிக்கப்பட்டார். அவரை பற்றி யாரும் சர்ச்சை எழுப்ப வேண்டாம்’’ எனக்
கூறினார்.
பீகார் கல்வித்துறையில் அதிகாரியாக
பணியாற்றும் கல்பனா குமாரியின் தந்தை ராகேஷ் குமார் மிஸ்ரா பேசுகையில்,
மகளின் சாதனைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
No comments:
Post a Comment