Latest News

இணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ்

சென்னை : இணைச் செயலாளர் பதவிக்கு வெளியாட்களை நியமிக்கும் முடிவின் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவாரங்களின் தலைமை செயலகம் ஆக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு அறிவிப்பு
இணைச் செயலாளர் பதவி
மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 10 இணைச் செயலாளர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு தான் தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.குடிமைப்பணிகளுக்கான இணைச் செயலாளர்களை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்படாத குழுவால் தேர்ந்தெடுக்க முடியாது. அதுமட்டுமின்றி தேர்வுக்குழு மூலம் நியமனங்கள் செய்யப்படும் முறை வெளிப்படையாக இருக்காது.

காவி மயமாக்கும் முயற்சி
சக்தி வாய்ந்த பதவி
மத்தியில் 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற நாளில் இருந்தே கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இப்போது அடுத்தக்கட்டமாக மத்திய அரசு நிர்வாகத்தையும் காவிமயமாக்கும் நோக்கத்துடன் தான் தனியார் துறையிலுள்ளவர்களை இணைச் செயலாளர்களாக நியமிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் பதவி முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

சங்பரிவாரங்கள் ஆட்சி
ஆர் எஸ் எஸ் பின்புலம்
பொதுவாக செயலாளர் நிலையிலான அதிகாரிகள் மேற்பார்வை பணிகளை மட்டுமே செய்யும் நிலையில் கொள்கை ஆவணங்கள் மற்றும் சட்ட முன்வரைவுகளை இணைச் செயலாளர்கள் தான் தயாரிப்பார்கள். இந்த பதவியில் சங்பரிவாரின் பின்புலம் கொண்டவர்களை நியமிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தலைமைச் செயலகமாக மாற்றுவது தான் மத்திய அரசின் நோக்கமாகும். 40 வயதில் இணைச் செயலாளராக ஒருவர் நியமிக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டால் மத்திய அமைச்சரவை செயலாளர் நிலை வரை உயர முடியும் என்பதால் அரசு நிர்வாகத்தின் மீதான சங்பரிவாரங்களின் பிடி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். இது மிகவும் ஆபத்தானது; இதை அனுமதிக்கவே கூடாது.

கொள்கைத் திணிப்பு
கைவிட வேண்டும்
இந்தியாவின் நிர்வாகச் சூழல் அமெரிக்கச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் நியமிக்கப்படுபவர்கள் கொள்கைத் திணிப்புகளில் ஈடுபடமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அதற்கு மாறான சூழல் நிலவுவது தான் இந்நிய மனங்கள் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர் நிலையில் பணியாற்ற தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவே செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.