சென்னை: எங்கேயாவது படிக்கிற பிள்ளைகள் யாராவது கையில் கத்தி, அரிவாள்,
கோடாரிகள் இதெல்லாம் கொண்டு போவார்களா? நம்ம ஊரில்தான் எல்லாம் நடக்குமே.
அதுவும் சென்னையில்தான் இது நடந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று
முதல் முதலாக கல்லூரி திறந்த மாணவர்களிடம் இதையெல்லாவற்றையும் போலீசார்
பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் சில ஆண்டுகளாகவே பச்சையப்பன்
கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள்
நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரி மாணவர்களிடையே நீயா? நானா?தான்
எப்போதும். யார் அதிகம் "கெத்" காட்டுவது? எல்லைத் தகராறு? யார் பெரியவர்?
இதுபோன்ற வாய்க்கா தகாறுதான் ஆண்டுதோறும் நடைபெறும்.
இதுமட்டுமல்லாமல், "பஸ் டே" என்று ஒன்றை வைத்துக் கொண்டு இவர்கள் போடும்
ஆட்டம் பொதுமக்களாலும், பயணிகளாலும் தாங்க முடிவதில்லை. பஸ் டே கொண்டாட்டம்
என்றால் வெட்டி குத்திக் கொண்டும், அடுத்தவர்களை தாக்கியும்,
இழிவுபடுத்தியுமா கொண்டாடுவது? இதனால்தான் பஸ் டே என்ற கொண்டாட்டத்துக்கே
தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அடங்கிய பாடில்லை.
இந்நிலையில்
கோடை விடுமுறை முடிந்து கல்லூரி வகுப்புகள் இன்று முதல் தொடங்குவதாக
இருந்தது. முதல் நாள் கல்லூரி போவது என்னவோ ஊர் உலகத்தில் இல்லாத மாதிரி
இதை கொண்டாட முடிவெடுத்தனர். தினமும் கல்லூரிக்கு புறநகர் பகுதியிலிருந்து
பயணம் செய்யும் பஸ்களில், ரயில்களில் பாட்டு பாடி, ஆட்டம் ஆடி கொண்டாடலாம்
என திட்டமிட்டனர். இந்த தகவல் போலீசாரின் காதுகளுக்கு சென்றுவிட்டது.
இப்படி அமர்க்களம் செய்தால், உடன் வரும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக
அமைந்துவிடும் என நினைத்து அதை தடுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட
தொடங்கிவிட்டனர்.
எதிர்பார்த்தபடியே சென்னை மாநகர பேருந்துகளில்
இன்று காலை மாணவர்கள் அட்டகாசம் தொடங்கியது. முதல் நாளிலேயே மாணவர்களிடையே
மோதலும் ஏற்பட்டு விட வாய்ப்பு ஏற்படும் என்றும் பயணிகளும் அச்சப்பட்டனர்.
டிரைவர்கள், கண்டக்டர்கள் என யாராலும் எதுவுமே பேசவோ, கேட்கவோ முடியாது.
அப்படியே கேட்டாலும் "நல்ல" பதிலை மாணவர்கள் வைத்திருப்பார்கள். சேட்டை
கூடிக்கொண்டேபோன சமயத்தில் திடீரென வந்த காவல்துறையினர் மாநகர
பேருந்துகளில் பல்வேறு இடங்களில் அமர்க்களம் செய்த 50 மாணவர்களை மடக்கிப்
பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் பச்சையப்பன், நந்தனம் மற்றும்
மாநில கல்லூரிகளை சேர்ந்தவர்கள். அது மட்டுமல்ல இவர்களிடமிருந்து
பட்டாக்கத்திகள், அரிவாள்கள், கோடாரிகள் போன்ற பயங்கரமான ஆயுதங்களையும்
போலீசார் பறிமுதல் செய்தனர். இத்தனை ஆயுதங்களும் சில நாட்களுக்கு
முன்புதான் செய்ததாம். இதையெல்லாம் வைத்துக் கொண்டு மாணவர்கள் எதற்காக
கல்லூரிகளுக்கு செல்கிறார்கள் என்பதை பேராசிரியர்களாலும் கேட்க
முடிவதில்லை, பெற்றவர்களாலும் கேட்க முடிவதில்லை. இத்தனை அசிங்கமும்
இனியும் தொடர்ந்து கொண்டே நடைபெறுமானால் பழமையும் பண்பாடும் மிக்க
தேசத்தில் இளையவர்களின் நிலை என்னவாகும் என்று யோசிக்க கூட முடியவில்லை.
அரசாங்கம்தான் இதை தலையிட்டு தடுக்க முடியும்.
source: oneindia.com
No comments:
Post a Comment