Latest News

543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்

சென்னை:
முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இன்றுதான் புதிய கட்சி தொடங்கிய நிலையில், பாராளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறி உள்ளார்.

உச்சநீதி மன்ற நீதிபளுக்கே சம்மன் அனுப்பி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கி உள்ளார். கட்சியின் பெயர் 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி'.
புதிய கட்சியின் தொடக்க விழா இன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தொடக்க விழாவுக்கு வந்த கர்ணன், அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாணிவித்துவிட்டு, கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். 

அவரது கட்சியின் கொடியின் மேல்புறத்தில் நீலக்கலரும், கீழே பச்சை கலரும், இடையில் மஞ்சள் கலருடன் அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு நடுவில் லஞ்சம் கொடுப்பதை தடுப்பதுபோன்ற வட்டவடிவிலான சின்னம் இடம்பெற்றுள்ளது.

அந்த சின்னத்தின் மேலே ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி (Anti corruption dynamic Party,) என்றும், கீழே லஞ்சத்தை வேரறுப்போம் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

புதிய கட்சியை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் நீதிபதி கர்ணன், நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலை ஓழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். அரசு துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று கூறினார்.

மேலும், தனது கட்சி சார்பில் அடுத்த ஆண்டுவர உள்ள பாராளுமன்ற தேர்தலில், நாடு முழுவதும் உள்ள 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றார். . மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வோம்.

எங்கள் கட்சியில் தொண்டர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும், இனி வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம். கட்சி அலுவலகங்களையும் திறப்போம்.

ஜாதி, மதம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளனர். கட்சிக்கு தேவையான நிதியை யாரிடமும் திரட்ட மாட்டேன். நானே எனது பணத்தை செலவு செய்வேன்
இவ்வாறு அவர் கூறினார்.

ஊழல் ஒழிப்பு செய லாக்க கட்சியின் தலைவராக கர்ணன் செயல்படுவார். பொதுச்செயலாளராக அந்தோணி லிப்ரோ, பொருளாளராக ராகுல் இஸ்லாம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.