Latest News

திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” தற்கொலைக்கு முன் பிரதீபா தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்

 “திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை”
தற்கொலைக்கு முன் பிரதீபா தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்
திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் பிரதீபா தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு உருக்கமான கடிதம்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளுரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய 2 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பாரமாக இருக்க விரும்பவில்லை

‘உங்க அம்மு உங்க கிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி. அப்பா சாரி பா. என்னால ஜெயிக்க முடியல. நீங்க என்மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. என்னால திரும்பவும் ஒரு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. எத்தனை முறை பா நான் தோல்வியை தாங்குவேன். தோல்வியடைந்ததால என்னால என் பள்ளிக்கு செல்ல முடியல. என்னோட ஆசிரியரை பார்த்து பேசுகிற தைரியம் எனக்கு இல்லை. என்னாலதானப்பா மற்றவங்க முன்னாடி நீங்க 2 வருஷமா தலைகுனிந்து வாழ்ந்தீர்கள். என் ஆசை நீங்க மற்றவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும். ஆனால் என்னால அதை செய்ய முடியல.

என் குடும்பம் நீங்க எல்லோரும் எனக்கு கிடைத்த வரம்பா. ஆனால் நான் உங்களுக்கு கிடைத்த சாபம்னு நினைக்கிறேன். எனக்கு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா எனக்கு அந்த சக்தியை கொடுத்தது நீங்க தான்பா. ஆனால் இதுக்கு மேலயும் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பவில்லை. இந்த முடிவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்பவே நீங்க என்னை தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்சம், கொஞ்சமாக மறந்துட்டு இருப்பீங்க. அதனால நான் அதை செய்யப்போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையை இழந்துட்டேன். நான் சாக போறேன். ஐயம் சாரி பா. லவ் யூ பா.

நம்பிக்கையை அழிச்சிட்டு வாழ்கிற வாழ்க்கை

எனக்கு வேற வழி தெரியலபா. நம்ம குடும்பம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லோரு கூடவும் ரொம்பநாள் சேர்ந்து இருக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா எனக்கு அந்த தகுதி இல்லை. இந்த முடிவு மற்றவங்களுக்கு கோழைத்தனமா தெரியலாம். ஆனா அடுத்தவங்க நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையை நாமே அழிச்சிட்டு வாழ்கிற வாழ்க்கையை விட இந்த முடிவே சரி. எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா. என்னால உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியல. அதுமட்டும் இல்லாம என்னால இருந்த எல்லா சந்தோஷத்தையும் நீங்க இழந்துட்டீங்க. அப்பா எனக்கு நீங்க தைரியம் சொன்னதுக்கு அப்புறமும் நான் இந்த முடிவு எடுக்கிறது தப்பு தான். ஆனால் என்னால தோல்வியை தாங்க முடியல. உங்க எல்லோரையும் விட்டுட்டு போகனும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது.

உங்க அம்மு

ஆனா அதை விட அதிகமான வலியை இந்த தோல்வி தந்து விட்டது. என்னால மற்றவங்க மாதிரி கிடைச்சத வச்சு வாழ முடியல. ஏன்னா அப்படி நான் வளரல. நான் மனசுல ஒன்னு வச்சுக்கிட்டு வாழ்க்கை முழுவதும் வேற ஒரு வாழ்க்கையை வாழரவங்க மாதிரி இல்லை. என்னால அந்த வலியை தாங்க முடியாது. என்ன மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுக்கா, மன்னிச்சுடுணா உங்கள எல்லாரையும் மிஸ் பன்றேன். ஐ லவ் மை பேமிலி.

இப்படிக்கு உங்க அம்மு (பிரதீபா).

இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதீபா எழுதி இருக்கிறார்.

பிரதீபா உடல் அடக்கம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தற்கொலை செய்த பிரதீபாவின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து மாணவியின் உடல் இறுதி சடங்குக்கு பின்னர் மாலை 6.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.