கர்நாடகாவில்
நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மணமக்கள் சிலரும் மாலையும்
கழுத்துமாக வந்து கடமை தவறாது தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
கர்நாடகா
மாநிலத்தில் உள்ள 222 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை
நடைபெற உள்ளது.
வாக்காளர்கள் காலை 7 மணியிலிருந்தே நீண்ட வரிசைகளில் நின்று தங்களது
ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். பிற்பகல் 3 மணி வரை 56 சதவீத வாக்குகள்
பதிவாகியுள்ளன.
இதனிடையே
தேர்தல் நாளான இன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமக்கள் சிலரும்
மாலையும் கழுத்துமாக வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள்.
கர்நாடகாவின் முக்கிய நகரான பகல்காட்டில் புதிதாக திருமணம் செய்து கொண்ட
ஜோடி, தங்களது திருமண சடங்குகளை முடித்த கையுடன் தங்களது வாக்குச்
சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனர். ஜோடியுடன் அவர்களது
உறவினர்களும் வந்திருந்தனர். வாக்களித்த பின் பேசிய அவர்கள், “தேர்தலில்
வாக்களிப்பது எங்களது ஜனநாயகக் கடமை. தேர்தல் நாளிலே எங்களுக்கு திருமணம்
நிச்சயம் செய்யப்பட்டது. நாங்கள் விரும்பிய நபர்களுக்கு வாக்களித்து
மகிழ்ச்சி” என தெரிவித்தனர்.
அதேபோல
மடிகேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி 131-ல் மணப்பெண் ஒருவர் தனது
வாக்கினை பதிவு செய்தார். இந்த வாக்குச் சாவடியில் அவரது கணவருக்கு ஓட்டு
இல்லை. அதனால் உறவினருடன் வந்த மணப்பெண் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மங்களூர் பகுதியில் உள்ள மணப்பெண் ஒருவரும் தேவாலயத்தில் தனது திருமணத்தை
முடித்த கையோடு விரைந்து வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று தனது
வாக்கினை செலுத்தினார். ‘இன்னும் 5 வருடம் ஆளப்போகும் நபரை தேர்வு செய்ய
எனக்கு உரிமை உள்ளது. அதனால் எனது ஜனநாயக உரிமையை ஆற்ற வந்தேன்” என அப்பெண்
தெரிவித்தார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ்
கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று பதிவாகும்
வாக்குகள் அனைத்தும் மே 15ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள்
அறிவிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment