
வியாழன், 3 மே 2018 (19:32 IST) வட இந்திய மாநிலங்களான
ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல்
மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 95 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமையன்று அடித்த பலமான
புழுதிப்புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள்
சாய்ந்தன. மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடை உயிரினங்கள் பல
உயிரிழந்தன. மேலும், கடுமையான மின்னல் தாக்கியதில் வீடுகள் உடைந்து, அதில்
தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். வட இந்தியாவில்
புழுதிப்புயல் என்பது சாதாரண ஒன்றுதான் என்றாலும், இந்த அளவிற்கு
உயிரிழப்பு ஏற்படுவது அசாதாரணமானது.
ராஜஸ்தானில் அல்வார், பரத்பூர் மற்றும் தொல்பூர் ஆகிய மூன்று மாவட்டங்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு குறைந்தது 31 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் அல்வார் மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. நிவாரணப் பணிகளுக்காக
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில
முதலமைச்சர் வசுந்தரா ராஜி கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 4
லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 43 பேர் ஆக்ராவை
சேர்ந்தவர்கள். பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். புதன்கிழமை மாலை தலைநகர் தில்லியிலும் கடும்
புழுதிப்புயலுடன் பலத்த மழை பெய்தது.
No comments:
Post a Comment