
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித்யை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த
கடிதத்தில், ''இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநிலக்
குழுவின் சார்பில் கீழ்க்கண்ட விஷயங்களை தங்கள் கவனத்திற்கு உடனடி
நடவடிக்கைகாக முன் வைக்கிறேன்.
கடந்த
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டை நகரில் உள்ள ஒரு
தனியார் கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரியும் நிர்மலா தேவி என்பவர் தனது
மாணவிகள் சிலருடன் பேசிய தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவு சமூக
ஊடகங்களில் பரவலாக பரிமாறிக் கொள்ளப்பட்டு வந்தது.
அந்த ஒலிப்பதிவில் ,,இருந்த விஷயங்கள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய
வைத்தது. இத்தகைய நெறிமுறையற்ற செயல்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட
வேண்டியவை ஆகும்.
தனது மாணவிகளுடன்
திருமதி நிர்மலா தேவி நடத்திய உரையாடலில் இருந்து இத்தகைய நெறிமுறையற்ற
செயல்களுக்கு அப்பாவி இளம்பெண்களை கவர்ந்திழுக்கும் முயற்சி இது முதல்
முறையல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் அதிகாரிகளின் காம
வேட்கைகளைப் பற்றி 'மிகுந்த கவனத்துடன்' அவர் அந்த இளம் பெண்களிடம்
பேசியிருக்கும் விதமும், "ஆளுநர் ஒன்றும் கிழவர் அல்ல" என்பது போன்ற
தனிப்பட்ட சொல்லாடல்களும் அவர்களின் திட்டங்களை வெளிப்படுத்துவதாக
அமைகின்றன.
மிக நெருக்கத்தில்
ஆளுநரின் வீடியோவை எடுத்தது; தமிழ்நாடு தேர்வாணையம் தன்னை அரசுத்
தேர்வுகளுக்கான விடைத்தாள்களைத் திருத்த அழைப்பு விடுத்தது; சமீப
காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு துணைவேந்தர்கள்
நியமிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய பூடகமான பேச்சு போன்ற அவரது
தனிப்பட்ட பெருமைகளை அந்த தொலைபேசி உரையாடலில் அவர் பேசியிருந்தார்.
இவை
அனைத்திற்கும் மேலாக, அந்தப் பெண்கள் எடுத்த எடுப்பிலேயே அவரது முயற்சிகளை
மறுத்துப் பேசிய பிறகும் கூட 'ஆழமாக இதுபற்றி சிந்தித்து முடிவெடுங்கள்'
என்று அந்தப் பெண்களிடம் திரும்பத் திரும்ப கூறியிருந்தார். தனது
ஆலோசனைகளுக்கும் அறிவுரைக்கும் இணங்கினால், அவர்களின் வங்கிக் கணக்கில்
பணம் வந்து குவியும் என்றும், அவர்களது உயர்கல்விக்கான அனைத்து வகையான
உதவிகளும் செய்யப்படும் என்பது போன்ற ஆசைவார்த்தைகளின் மூலமும் அந்த
மாணவிகளை கவர்ந்திழுக்க அவர் முயற்சி செய்துள்ளார்.
ஒரு
பேராசிரியரின் இத்தகைய நடத்தை என்பது தனிப்பட்ட ஒரு நபரின் தவறான
நடவடிக்கை என்பதாக கருதிவிட முடியாது. விரும்பத்தகாத, ஊறுவிளைவிக்கும்
வகையிலான இத்தகைய நடவடிக்கைகளில் இளம் பெண்களை கவர்ந்திழுக்க இது போன்ற
மேலும் பலர் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் தமிழ்நாட்டு
மக்களின் மனதில் வலுவாக எழுந்துள்ளது. மிகப்பெரும் குற்றவாளி கும்பல்களின்
வலைப்பின்னல் ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவே தோன்றுகிறது.
இத்தகைய
நடவடிக்கைகளில் தற்போதைய ஆளுநர், அவரது அலுவலகம், உயர்கல்வித் துறை,
தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் உயர்
அதிகாரிகள் பலருக்கும் இதில் பங்கிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வலுவான
வகையில் எழுந்துள்ளது. இத்தகைய முறைகேடான நடவடிக்கைகளுக்காக மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்
ஊடகங்களில் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தகைய
வலைப்பின்னலுக்கு இடையே செயல்படுபவராகவும் திருமதி. நிர்மலா தேவி இருக்க,
அவருக்குப் பின்னால் அரசியலிலும் அதிகாரத்திலும் உயர் நிலையில் உள்ளவர்கள்
செயல்பட்டு வரக் கூடும். தென்னக மாநிலம் ஒன்றைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர்
மீது பாலியல் ரீதியான தவறான செயல்பாடு குறித்த புகார் ஒன்று
எழுந்துள்ளதாகவும், அந்தப் புகாரின் மீது மத்திய உள்துறை அமைச்சகம்
விசாரித்து வருவதாகவும் சில ஊடகங்களில் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக
செய்திகள் வெளியாயின.
அதே நேரத்தில்,
தனக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களின் வரம்பை மீறிய வகையில் அரசுப்
பதவிகளுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பாரபட்சமான முறையிலும்
நியமனங்களை செய்து வந்துள்ளதையும் எங்களால் காண முடிந்தது. இவை அனைத்தையும்
ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, வேறு சில 'பங்களிப்பு'களுக்குப் பிரதிபலனாக
'தகுதி, திறமை ஆகியவற்றை மீறிய வகையில்' இத்தகைய நியமனங்கள் அனைத்தும்
நடைபெற்றுள்ளன என்ற சந்தேகமும் மக்களின் மனதில் எழுந்துள்ளது.
மேற்கூறிய
தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு மக்களிடையே தீவிரமாக பரவிய நிலையில்,
மக்கள் விரிவான வகையில் தங்கள் மனக்கசப்பை வெளிப்படுத்தினர். மக்களின்
பல்வேறு பிரிவினரும் நேரடியாக கிளர்ச்சிகளில் இறங்கினர். சென்னை
உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை ஒன்றுக்கு
உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இத்தகைய விசாரணையை முறையாக
மேற்கொள்ள உதவும் வகையில் தற்போதுள்ள ஆளுநரை மத்திய அரசு உடனடியாக
திரும்பப் பெற வேண்டியது அவசியமாகும்.
நெறிமுறை
தவறிய நடவடிக்கைகள் குறித்த புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள
பின்னணியில், இந்த உரையாடல் குறித்தும், அது தொடர்பான இதர விஷயங்கள்
குறித்தும் விசாரிப்பதற்கென திரு. ஆர். சந்தானம், இ.ஆ.ப.(ஓய்வு) தலைமையில்
ஒரு நபர் விசாரணை கமிஷன் ஒன்றை தற்போதைய ஆளுநர் நியமனம் செய்துள்ளது
மிகவும் அதிர்ச்சிகரமான செயலாகும். சந்தேகத்திற்கு உரியவரே
(குற்றச்சாட்டில் இருந்து) தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒரு விசாரணை
கமிஷனை நியமித்துள்ளதாகவே பரவலாக கருத்து நிலவுகிறது. எனவே ஆளுநர்
நியமித்துள்ள இந்த ஆணையம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
மாநிலத்திலுள்ள
பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற சந்தேகத்திற்கு இடமான, அருவருக்கத்தக்க
நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்பது வன்மையாகக்
கண்டிக்கத்தக்கவையாகும். ஆளுநரின் அலுவலகமே இத்தகைய சச்சரவில் சிக்கிக்
கொண்டுள்ளது என்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே
குடியரசுத் தலைவர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழக ஆளுநரை
உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் பதவியின் பெருமையை
நிலைநாட்ட வேண்டும் என்றும் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள், கல்வி
நிலையங்கள் ஆகியவற்றின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்றும் நாங்கள் இதன்
மூலம் வலியுறுத்துகிறோம்'' என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment