
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட
நிர்மலா தேவி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூன்று அதிகாரிகளின் பெயரைக்
குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக
சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை பேராசிரியை
நிர்மலா தேவியை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி.
போலீஸார், இரண்டாவது நாளாக அவரிடம் இன்று விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையின்போது நிர்மலா தேவி சோர்வாகக் காணப்பட்டார். இதனால் அவருக்கு
மருத்துவப் பரிசோதனை நடந்தது. மனஅழுத்தம், உடல் சோர்வு ஆகியவை காரணம் என்று
மருத்துவர்கள் போலீஸாரிடம் கூறியதோடு அவரிடம் விசாரணையும் நடத்தலாம்
என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணையைப் போலீஸார் தொடங்கினர். காலையில் பெண்
இன்ஸ்பெக்டர்கள் டீம் முதலில் விசாரித்தது. எஸ்.பி.ராஜேஸ்வரி
மேற்பார்வையில் நடந்த இந்த விசாரணையில் நிர்மலா தேவி சொன்ன தகவல் அனைத்தும்
பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "நிர்மலா
தேவியிடம் உங்களால் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வியைக்
கேட்டபோது அவரது முகம் மாறியது. `நான் மாணவிகளுக்கு நல்ல வழியைத்தான்
காட்டினேன். ஆனால், என்னுடைய பேச்சை வேறுவிதமாகப்
புரிந்துகொள்ளப்பட்டுள்ளது' என்று ஆவேசமாகக் கூறினார். உடனே நாங்கள்,
நீங்கள் நல்ல விதமாக பேசினால், எதற்காக உங்கள் மீது மாணவிகள் புகார்
கொடுத்துள்ளார்கள் என்று கேட்டோம். அதற்கு, 'செல்போன் உரையாடல் வெளியானது
தொடங்கி என்னை சஸ்பெண்டு செய்தது வரை பெரிய சதி இருக்கிறது. நீதிமன்றத்தில்
நிச்சயம் உண்மையைச் சொல்லுவேன்' என்று கூறினார்.
ஆனாலும், எங்களது
கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
கல்லூரியில் பணியாற்றும் உங்களுக்கு எப்படி பல்கலைக்கழகத்தில் முக்கிய
நபர்களின் அறிமுகம் கிடைத்தது என்று கேட்டதற்கு, அதையெல்லாம் உங்களிடம்
சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார். இதனால், விசாரித்த பெண்
இன்ஸ்பெக்டர் ஒருவர் கோபத்தில், `நீங்கள் எங்களிடமிருந்து எதையும் மறைக்க
முடியாது. சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினர், விசாரணை
அறிக்கைகள் எல்லாம் உங்களுக்கு எதிராகவே இருக்கின்றன. எனவே, உண்மையைச்
சொல்வதைத் தவிர வேறுவழியில்லை என்று விடாப்பிடியாக விசாரித்தோம். அதன்
பிறகு நீண்ட நேரம் அமைதியாக இருந்த நிர்மலா தேவியிடம் பெண் போலீஸ்
உயரதிகாரி விசாரித்தார். அப்போது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூன்று
பெயரை மட்டும் நிர்மலா தேவி கூறினார். அவர்கள் மூன்று பேரும் முக்கிய
பதவிகளில் இருப்பவர்கள். அவர்கள் சொன்னதால்தான் இப்படி செய்தேன் என்று
தெரிவித்தார். அவர்களும் நிர்மலா தேவியுடன் வாட்ஸ் அப்பில் சாட்டிங்
செய்துள்ளதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இதனால் விரைவில்
அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளோம்" என்றனர்.
யார்
அவர்கள் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,
"அவர்கள் குறித்த விவரங்களை இப்போதைக்குச் வெளியில் சொல்ல முடியாது.
ஏனெனில், அது விசாரணையைப் பாதிக்கும். ஏற்கெனவே பல்கலைக்கழகத்தில்
யாரெல்லாம் நிர்மலா தேவியுடன் நட்பில் இருந்தார்கள் என்ற தகவல்
சேகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த
மேலிடத்தின் கிரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கிறோம். உயரதிகாரிகளிடம்
ஆலோசித்துவிட்டு அவர்களிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த
வழக்கில் பல்கலைக்கழகத்தைத் தவிர, உயர் கல்வித்துறையில் உள்ள சிலர் மீதும்
எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. நிர்மலா தேவி சொன்ன பல்கலைக்கழக மூன்று
பேரிடம் விசாரிக்கும்போது அவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும்"
என்றார்.
பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களிடம் கேட்ட போது, "நிர்மலா
தேவி பல்கலைக்கழகத்துக்கு வந்தால், கடவுளின் பெயரைக்கொண்ட ஒரு அதிகாரியைச்
சந்திப்பதுண்டு. அடுத்து, துணைவேந்தர் அலுவலகத்தில் இருக்கும் ஸமார்ட்
ஆபீஸருடன் பேசுவார். பிறகு, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியுடன் டீ சாப்பிடுவார். இதுதவிர
கணிதத்துறைக்கும் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்துக்கும் செல்வார். இங்குதான்
நீங்கள் சொல்லும் அடையாளங்களுடன் கூடியவர்கள் பணியாற்றுகின்றனர்" என்றனர்.
No comments:
Post a Comment