Latest News

  

பாகிஸ்தானில் தான் சுடப்பட்ட சொந்த ஊருக்கு சென்ற மலாலா

தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய்.

அவரது சொந்த ஊரான ஸ்வாட், முன்னொரு காலத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தது. 

பயங்கரவாதிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்து பெரிதும் பேசி வந்த மலாலா, தனது 15ஆவது வயதில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். 

முன்னதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் உணர்ச்சிபூர்வமாக பேசிய மலாலா, "பயமில்லாமல், அமைதியாக பாகிஸ்தானுக்கு வந்து, தெருக்களில் நடந்து, மக்களுடன் பேசுவது என்பது எனது கனவு. தற்போது நான் என் பழைய வீட்டில் உள்ளதாக நினைக்கிறேன். என் கனவு நிறைவேறி இருக்கிறது. உங்களுக்கு நான் கடமை பட்டுள்ளேன்" என்றார்.
தன் சொந்த ஊருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார் மலாலா. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மின்கொரா என்ற இடத்தில் உ
ள்ள அவர் வாழ்ந்த வீட்டிற்கு அருகேயே ஹெலிகாப்டர் தரையிரக்கப்பட்டது.
அவர் ஏன் தாக்கப்பட்டார்?
தாலிபனின் பிடியில் தனது வாழ்க்கை எப்படி உள்ளது என்பது குறித்து, பெயர் வெளியிடாமல் பிபிசி உருது சேவையில் எழுத தொடங்கினார் மலாலா.
2009ஆம் ஆண்டு அவரைக் குறித்து ஆவணப்படம் ஒன்று வெளியானது. 

பெண்கள் கல்விக்கு குரல் கொடுக்கத் தொடங்கிய அவர், 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். சர்வதேச கவனத்தை அது ஈர்த்தது.

அவர் "மேற்கத்திய கலாசாரத்திற்கு ஆதரவாக" இருப்பதால் அவரை சுட்டதாக பாகிஸ்தானில் உள்ள தாலிபன்கள் தெரிவித்தனர். 

அந்த தாக்குதலில் மலாலா பலத்த காயமடைந்தார். மேலும், அவரின் மூளையில் வீக்கம் ஏற்படுவதை தடுக்க மண்டை ஓட்டின் ஒரு பகுதியை நீக்கும் நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் அவசரகால சிகிச்சைக்கு பிறகு அவர் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

என்ன செய்தார் மலாலா?
பிழைத்து வந்த மலாலா உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்
உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்கவும், எந்தவித அச்சமும் இன்றி வாழ்வில் முன்னேறவும் அவர் தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா நிதி அமைப்பை அவர் உருவாக்கினார்.
2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மலாலா. இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்பையும், அமைத்திக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் பெற்றார் மலாலா.

குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடியதற்காக இந்திய ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார் மலாலா.

அவர் தனது படிப்பை தொடர்ந்து கொண்டே தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மேலும் கடந்த ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.