
காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிப்பதாக நெல்லை
வருகை தந்த விவசாயச் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு குற்றம் சாட்டினார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடுக்கக்
கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.
நஞ்சில்லா
உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக்
கொண்டு விவசாயம் செய்வதைத் தடை செய்யக் கோரியும் குமரி முதல் கோட்டை வரை
விவசாயிகள் விழிப்பு உணர்வுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். மார்ச் 1-ம் தேதி
குமரியில் தொடங்கப்பட்ட இந்தப் பயணம் 100 நாள்களில் 32 மாவட்டங்களில்
சுற்றிவந்து சென்னையில் நிறைவடைகிறது.
வழிநெடுக விவசாயிகளிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயணம்
திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லைக்கு வருகை தந்த இந்தக் குழுவினர்
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு
விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அய்யாக்கண்ணு, ''காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கப்படாவிட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா
மாவட்டங்கள் முழுவதுமாக அழிந்து போகும். 29 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்
பாலைவனமாக மாறிவிடும். கர்நாடகாவில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்
தேர்தலை மனதில்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு
இழுத்தடித்து வருகிறது. பிரதமர் மோடியில் இந்தச் செயல் இலங்கையில் ராஜபக்ஷே
அரசு தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு சமம். தமிழகத்திலிருந்து முதல்வர்
உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் பிரதமரைச் சந்திக்க அனுமதி
கேட்டும் இதுவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது ஜனநாயக விரோதச்
செயல்.
தமிழகத்துக்குக் காவிரித் தண்ணீரையும் கிடைக்க விடாமல்
தடுப்பதுடன், வறட்சி நிவாரணம் கிடைக்காத நிலை இருக்கிறது. அத்துடன்,
விவசாயக் கடனையும் ரத்து செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து
வருகிறது. ஆந்திராவுக்கு நிதி வழங்காததைக் கண்டித்து அந்த மாநில
எம்.பி-க்கள் பிரதமர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தினார்கள்.
அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் செய்யும் பிரதமரின்
முடிவைக் கண்டித்து தமிழக எம்.பி-க்கள் பிரதமரின் அலுவலகம் முன்பு நாமம்
போட்டு போராட்டம் நடத்த வேண்டும். தமிழக எம்.பி-க்களின் போராட்டத்துக்குப்
பின்னரும் மத்திய அரசு செவிசாய்க்காமல் செயல்பட்டால், தமிழகத்தின்
ஒட்டுமொத்த எம்.பி-க்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும்
அனைத்துக்கட்சிகளின் எம்.பி-க்களும் ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் எனவும்
மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தை வரவேற்கிறேன். அதனை அனைவரும் செயல்படுத்தத்
தயாராக இருக்க வேண்டும்'' என்றார்.
No comments:
Post a Comment