
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மீண்டும் போர்க்களமாகிவிட்டது.
செல்போன்
டவரில் ஏறி போராட்டம்.... ஆற்றில் இறங்கி போராட்டம்.. ஒன்று கூட முயன்று
கைது... பிச்சை பாத்திரம் ஏந்தி போராட்டம்... வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி
போராட்டம்..
தமிழகம் மீண்டும் போர்க்களமாகிவிட்டது. மத்தியில் பாஜக
ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் வாழ்வுரிமை
விவகாரங்களிலும் முதுகில் குத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு
பிரச்சனைக்கும் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டே இருக்கிறது தமிழகம்.
ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க வரலாறு காணாத அமைதிப் புரட்சியை தமிழகம் முன்னெடுத்தது.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக கதிராமங்கலமும் நெடுவாசலும் இன்னும் கனன்று கொண்டே இருக்கின்றன.
நீட்
தேர்வுக்கு எதிரான உரிமை முழக்கம் இன்னமும் எதிரொலிக்கிறது. கெயில்
எரிவாயு குழாய் பதிப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து மேற்கு மாவட்டங்கள்
போர்க்கோலம் பூண்டுள்ளன. நியூட்ரினோ எனும் நாசகார திட்டத்தைக் கண்டித்தும்
ஸ்டெர்லைட் உயிர்க் கொல்லி ஆலையை மூட வலியுறுத்தியும் தென் மாவட்டங்களில்
கொந்தளித்து போராடிக் கொண்டே இருக்கின்றன.
சென்னை முதல் குமரி
வரையிலான மீனவர்கள் நித்தம் நித்தம் வாழ்வை பணயம் வைத்து கடலுக்குச்
செல்கின்றனர். எந்த திசையிலும் தமிழர்கள் தாங்கள் பாதுகாப்பாக வாழ்வதாக
உணரவே இல்லை.
இப்போது உச்சநீதிமன்றம் 6 வார கெடு விதித்தும் சட்டை
செய்யாமல் தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் துரோகம் செய்திருக்கிறது மத்திய அரசு.
இப்போது தமிழகம் மட்டுமல்ல புதுவை மாநிலமும் இணைந்து போர்க்களத்தில்
இறங்கியிருக்கின்றன.
அரசியல் கட்சிகளோ கடையடைப்பு, கருப்புக் கொடி
காட்டும் போராட்டங்கள் அறிவிக்கின்றன. இத்தனை போராட்டங்களுக்குப்
பின்னராவது ஜல்லிக்கட்டை மீட்டது போல ஆயிரமாயிரமாண்டு காவிரி உரிமை
மீட்கப்படுமா?
source: oneindia.com
No comments:
Post a Comment