அன்னவாசல் அருகே தாண்றீஸ்வரத்தில் இன்று (13.3.2018) நடைபெற்ற
ஜல்லிக்கட்டில் மாடு உரிமையாளர் ஒருவரை மற்றொரு காளை பாய்ந்து முட்டியதில்
பலியானார். இதுதவிர, போலீஸ்காரர் ஒருவர் உட்பட 14 பேர்கள் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை
மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள தாண்றீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம்கார
மூர்த்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டு
நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 690-க்கும் மேற்பட்ட காளைகள்
கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து தகுதியுள்ள 658 காளைகளை
மட்டும் வாடிவாசலுக்குள் அனுப்பினர்.
அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்த
பின்னர் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 658
காளைகளும் 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
இதில்
காளைகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் முருகேசன், வெள்ளைச்சாமி,
யோகேஸ், பிரகாஸ், பார்வையாளர்கள் அழகர், ராமசந்திரன், ராம்கி, விஜய், உள்பட
மொத்தம் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அதே பகுதியில்
அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் 4 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர,
ஜல்லிக்கட்டுப்
போட்டிக்குத் தனது நண்பர்களுடன் வந்திருந்த முத்து என்பவர் தனது காளையை
அவிழ்த்துவிட்ட பிறகு வாடிவாசல் முன்புறம் நின்றபோது, வாடிவாசலில் இருந்து
வெளியே சென்ற வேறொரு காளை மீண்டும் திரும்பி வந்தது. இதை அறியாமல் அந்த
இடத்தில் நின்ற முத்து கடைசி நேரத்தில் அவர் சுதாரித்துத் திரும்பும்போது,
முத்துவின் நெஞ்சில் காளை முட்டியது இவர் இலுப்பூர் அருகிலுள்ள
குவாட்டுப்பட்டியைச் சேர்ந்த நடசேன் என்பவரின் மகன். படுகாயம் அடைந்த
முத்துவை இலுப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக
உயிர் இழந்தார்.
அதேபோல், ஜல்லிக்கட்டு காளை வெளியேரும் பகுதியில்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த
ஏ.ஆர்.போலீஸ் ஆனந்த் என்பவர் மாடு முட்டியதில் மார்பகப் பகுதி மற்றும்
தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு சம்பவ இடத்திலேயே
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நிபந்தனைகளின்படி முறையாக நடைபெறுகிறதா என்பதை
ஏ.டி.எஸ்.பி இளங்கோவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
இதில் இலுப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில் சுமார்
100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளைத்
தாண்றீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விழாக்குழுவினர் மற்றும் ஊர்
பொதுமக்கள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment