Latest News

  

மத்திய அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது!! குழி தோண்டி புதைக்கட்ட கூட்டாட்சி தத்துவம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்ப்பில் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு கர்நாடகம் செய்ய நினைக்கும் துரோகத்தை விட, பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு இழைக்க மத்திய அரசு துடிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29 ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கிறதா? அல்லது பொதுவான வார்த்தையா? என்பதுதான் மத்திய அரசுக்கு எழுந்துள்ள ஐயமாகும். இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை என்பது தான் பாமகவின் வாதமாகும்.
ஒருவேளை மத்திய அரசுக்கு ஐயம் இருந்தாலும் கூட அதுகுறித்து மட்டும்தான் விளக்கம் கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு 5 வினாக்களின் மூலம் 6 ஐயங்களை எழுப்பியிருக்கிறது. அவற்றில் இரண்டாவது வினா மூலம் மத்திய அரசு எழுப்பியுள்ள இரு ஐயங்கள் மிக ஆபத்தானவை. காவிரி மேலாண்மை வாரியம் என்ற கோட்பாட்டையே சிதைக்கக் கூடியவை. இதை அனுமதிக்கக் கூடாது.
காவிரி மேலாண்மை வாரியம் முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலப்பு அமைப்பாக மாற்றலாமா? மத்திய அரசால் அமைக்கப்படவிருக்கும் வாரியத்தின் செயல்பாடுகள் நடுவர் மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாமா? என்பதுதான் மத்திய அரசு கோரியிருக்கும் முக்கிய விளக்கங்களாகும்.
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றாக காவிரி மேற்பார்வை வாரியத்தை அமைக்கலாமா? என்பதைத்தான் மத்திய அரசு வேறு வேறு வார்த்தைகளில் கேட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் ஆணையிட்டதன் நோக்கமே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக தண்ணீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான்.
இதில் நிர்வாகப் பணிகள் எதுவுமில்லை. தொழில்நுட்பப் பணிகள் மட்டுமே இருப்பதால்தான் காவிரி மேலாண்மை வாரியத் தலைவராக நீர்ப்பாசனத் துறையில் தலைமைப் பொறியாளர் நிலையில் பணியாற்றிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டிருந்தது. மாறாக, வாரியத்தை நிர்வாக அமைப்பாக மாற்றுவதன் மூலம் அதன் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்து வாரியத்தை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள மத்திய அரசு துடிக்கிறது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமின்றி, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்க சதி செய்கிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் நாட்டு மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதுவரை கர்நாடக அரசு கூறிவந்த காரணத்தை கர்நாடகத்தின் குரலாக மாறி மத்திய அரசு ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
கர்நாடக மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்பதற்காக கவலைப்படும் மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடப்படாததால் கடந்த இரு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்ததை நினைத்துக் கவலைப்பட மறுக்கிறது. இதிலிருந்தே மத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து அணைகளையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு 4 மாநிலங்களுக்கும் மாத அட்டவணைப்படி தண்ணீர் பகிர்ந்து வழங்குவதற்காக காவிரி மேலாண்மை வாரியம்தான் தமிழகத்தின் தேவையாகும். இதற்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழகம் ஏற்கக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.