
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமத்தில்
உள்ள செயின் ஜோசப் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் அரங்கேற்றப்படுவதாகச்
செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து, அந்த இல்லத்துக்குத்
தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே
அர்ஜூன் சம்பத் தலைமையில், 'கருணை இல்ல'த்துக்கு எதிராக இந்து மக்கள்
கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த
26 ம் தேதி இந்து மக்கள் கட்சியினர் பாலேஸ்வரம் முதியோர் இல்லத்துக்கு
எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (27-02-2018) இந்து
மக்கள் கட்சி சார்பாக அர்ஜூன் சம்பத் தலைமையில் கருணை இல்லத்தை
முற்றுகையிடச் சென்றனர்.
காவல்துறையினர் அதற்கு அனுமதிதர மறுத்ததால், சாலவாக்கம் பகுதியில்
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
முடிந்த பிறகு நம்மிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "கடந்த சில வருடங்களாகவே
இங்கு மர்மம் நிலவுவதாக ஊர்மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறார்கள். அங்கே முதியவர்களைக் கொடுமைப் படுத்துவதாகவும், திடீரென அந்த
இல்லத்தில் நடு இரவில் முதியோர்களின் அழுகுரல் சத்தம் கேட்பதாகவும்
அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். முதியோர் இல்ல வாகனத்தில் காய்கறிகளோடு
பிணத்தையும் ஏற்றி வந்திருக்கிறார்கள். அந்த வாகனத்தில் முதியவர்களும்
கடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். ஊர் மக்கள்தான் வாகனத்தை மறித்து
அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை
எடுக்காமல் மூடி மறைக்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. யார் புகார்
கொடுத்தார்களோ, அவர்கள் மீது ஆம்புலன்ஸை உடைத்ததாக வழக்குப் பதிவு செய்து
கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில், என்ன நடக்கிறது எனப் பொது
மக்களுக்குத் தெரிவதில்லை. இந்து மக்கள் கட்சி சார்பாக எங்கள் மாநிலச்
செயலாளர் செந்தில் மற்றும் மாநில நிர்வாகிகள் ஸ்பை கேமராவுடன் உள்ளே
சென்றுள்ளனர். பிணவறைகளில் பிணத்தைப் புதைக்கும்போது ஏதோ ஒரு திரவத்தை
தெளிப்பதாகவும், பிறகு அதை மூடிவிடுவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். அதன்
பிறகு சதை எல்லாம் அழுகி வெளியேறிய பிறகு எலும்புகளைச் சேகரிக்க ஓர்
அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஸ்பை கேமரா மூலம் பதிவு
செய்திருக்கிறார்கள்.
காப்பகத்தின்
உள்ளே சுமார் 70 பேர் நிர்வாணமாகவே இருக்கிறார்கள். நிர்வாணமாகவே
நடமாடுகிறார்கள். ஏன் என்று கேட்டால், அவர்கள் புத்திசுவாதீனம்
இல்லாதவர்கள் எனக் கருணை இல்லத்தில் சொல்கிறார்கள். அவர்களாகவே விரும்பி
இங்கே வரவில்லை. அவர்களின் குடும்பத்தினரும் கொண்டுவந்து அவர்களை
விடவில்லை. சாலைகளில் திரியும் முதியோர்களை கொண்டுவருவதென்றால், அந்த ஊர்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், காவல்நிலையத்துக்கும், வருவாய் துறைக்கும்
தகவல் தெரிவித்த பின்னரே அவர்களை இங்கே கொண்டுவர வேண்டும். முதியோர்களைப்
பராமரிக்க பல விதிமுறைகள் இருக்கின்றன.
சர்வதேச
அளவில் உடல் உறுப்புகளுக்காகவும், மருத்துவப் பரிசோதனைக்காகவும்
முதியோர்களைக் கடத்துவது வாடிக்கையாகிவிட்டது. நேரடியாகக் கடத்தல் நடந்ததா?
எலும்புகளைப் பிரித்து எடுத்து கடத்தல் செய்யப்பட்டதா? எலும்புகளை வைத்து
என்ன செய்கிறார்கள்? இது தவிர வேறு ஏதாவது நடந்திருக்கிறதா...
என்பதையெல்லாம் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். கடந்த இரண்டாண்டுகளாக
அங்கிருக்கும் மக்கள்தான் இந்த மர்மங்களை எதிர்த்துக் குரல் கொடுத்து
வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளோ, பி.ஜே.பி-யோ குரல்
எழுப்பவில்லை. திராவிட இயக்கங்கள்தாம் அந்தப் பகுதிகளில் வலிமையாக
இருக்கின்றன. நாங்கள் எதிர்த்தால் கிறிஸ்துவர்களுக்கு எதிரானவர்கள் எனச்
சொல்லி திசை திருப்பிவிடலாம். ஆனால், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட
அமைப்புகளை அப்படிச் சொல்லிவிட முடியுமா? செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர்கள்
முழுவதும் ஃபாதர் தாமஸ்க்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவர்கள் எஸ்.ரா.
சற்குணத்துக்கு நெருக்கமானவர்கள். தமிழகத்தில் ஐந்து இடங்களில் கருணை
இல்லத்தை நடத்திவருவதாக தகவல் வந்திருக்கிறது. அந்த இடங்களிலும் இதுபோன்று
நடக்கிறதா? அவர்களை பராமரிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது? சேவை என்ற
பெயரில் சட்ட விரோத காரியங்கள் நடக்கிறதா என்பதையெல்லாம் அரசுதான்
தெளிவுபடுத்த வேண்டும். இதுபோல் ஓர் இந்து சாமியார் கோயிலில்
நடைபெற்றிருந்தால் சும்மா இருப்பார்களா?
இவ்வளவு
நடந்தும் எந்த நடவடிக்கையும் முழுமையாக மேற்கொள்ளவில்லை. ஆசிரமத்தில்
உள்ளவர்களை முழுமையாக இடமாற்றம் செய்தபிறகு இந்த ஆசிரமத்தை மூடுவது என
இந்தப் பிரச்னையை முடித்து வைக்கும் முயற்சியில்தான் அரசு அதிகாரிகள்
ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 1,590 பேர் சர்ச்சைக்குரிய முறையில் அடக்கம்
செய்யப்பட்டிருக்கிறார்கள். 1,590 பேர் இப்படி அடக்கம் செய்வதென்பது பெரிய
குற்றம். யார் இவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்தது? எதற்காக இந்தப்
பிணவறைகள்? தமிழக போலீஸ் ஏன் இவற்றை கண்டு கொள்வதில்லை? எஸ்.ரா. சற்குணம்
போன்ற தி.மு.க-வில் வலிமை படைத்தவர்கள், அ.தி.மு.க அமைச்சர் பென்ஜமின்
ஆகியோர் கிறிஸ்துவர்கள் என்பதற்காகவே கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா?
தமிழ்நாடு முழுவதும் அன்பு இல்லம், கருணை இல்லம் எனச் சொல்லிக்கொண்டு
கிறிஸ்துவர்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுகிறார்கள். தமிழ்நாடு
முழுவதிலும் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவற்றோர்
என்றால் இறந்தவரின் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால்,
இவர்கள் அப்படிச் செய்யாமல் மர்மமான முறையில் அடக்கம் செய்கிறார்கள். இது
தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ இந்த வழக்கை விசாரணை
செய்ய வேண்டும். அந்தப் பாதிரியார் மீது இதுவரை வழக்குப் பதியவில்லை.
அவர்மீது உடனடியாக வழக்குப் பதிய வேண்டும். இதில் பி.ஜே.பி-யினர்கூட அக்கறை
செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
இந்த மர்மங்களை வெளிக்
கொண்டுவரவேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை. முதியோர்களைக் கொலை
செய்துள்ளார்கள் என்று தெரியவந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அதில் தொடர்புடையவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க
வேண்டும்" என்கிறார்.
Dailyhunt
No comments:
Post a Comment