
தமிழக ஆளுநர் மாளிகைக்கு
பர்னிச்சர் பொருள்களை கொடுத்ததாக போலி பில் தயாரித்து கடந்த 5 ஆண்டுகளில்
10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தொழிலதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஆளுநரின் துணைச் செயலாளர் சவுரிராஜன், கடந்த சில
தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார்
ஒன்றைக் கொடுத்தார். அதில், ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் பொருள்களை சப்ளை
செய்ததில் முறைகேடு நடந்திருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர்
ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன்
தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் விசாரித்தார்.
அப்போது, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ்
வட்டாரங்கள் கூறுகையில், "சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர்
அலுவலகத்துக்கு பர்னிச்சர் பொருள்கள், அடையாறில் உள்ள பர்னிச்சர்
கடைகளிலிருந்து சில ஆண்டுகளாக சப்ளை செய்யப்பட்டுவருகிறது. அந்தக் கடையில்
போலீஸார் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது போலி பில்கள் போலீஸாரிடம்
சிக்கின. பில்லில் குறிப்பிடப்பட்ட பர்னிச்சர் பொருள்கள், ஆளுநர்
அலுவலகத்துக்கு சப்ளை செய்யப்படவில்லை. இதுகுறித்து தொழிலதிபர் முகமது
யூனிஸிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைது செய்துள்ளோம். அவர் மீது மோசடி
(420), போலியாகத் தயாரித்தல் (465), நம்பிக்கை மோசடி குற்றம் (406) ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். போலி பில் மூலம் 10 கோடி
ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. அதில் ஆளுநர் அலுவலக நிதித்துறையில்
பணியாற்றுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்"
என்றனர்.
இதற்கிடையில் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்
பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். முறைகேடு
குறித்து ஆளுநருக்குத் தகவல் கிடைத்ததும் அதுதொடர்பாக விசாரிக்க
உத்தரவிட்டுள்ளார். முறைகேடு வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதால்
தொழிலதிபர் முகமது யூனிஸிக்கு உதவிய ஆளுநர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள்
அச்சத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment