
நாகாலாந்தில் வெற்றி பெறச் செய்தால் கிறிஸ்துவர்களுக்கு இலவச ஜெருசலேம்
பயணம் ஏற்பாடு செய்து தருவதாகப் பா.ஜ.க வாக்குறுதி அளித்திருக்கிறது.
நாகாலாந்து மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் பா.ஜ.க அங்கு வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. நாகாலாந்தில் கிறிஸ்துவர்கள் அதிகம். 88 சதவிகித மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். ஆகவே, அவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது.
அதில் ஒன்று கிறிஸ்துவர்களை ஜெருசலேமுக்கு இலவச புனிதப் பயணம் அழைத்துப் போவது ஆகும். நாகாலாந்து மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் விஜோ இதுபற்றி பேசுகையில், "நாகாலாந்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மூத்த குடிமக்களை ஏசு பிறந்த இடமான ஜெருசலேமுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு மானியம் தருவதாகக் காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதி அளித்துள்ளது.
மத்திய பா.ஜ.க அரசு சமீபத்தில்தான் ஹஜ் புனிதப் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்தது. ஹஜ் மானியத்தை ரத்து செய்துவிட்டு, நாகாலாந்தில் கிறிஸ்துவர்களுக்கு இலவச ஜெருசலேம் பயணம் அறிவித்திருப்பது விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இதை விமர்சித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி, "பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தேர்தல் ஆதாயத்துக்காக எதையும் செய்வார்கள். கிறிஸ்துவர்களை ஜெருசலேமுக்கும் அழைத்துச் செல்வார்கள்" என்றார்.
No comments:
Post a Comment