கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வயலில் பாய்ச்சி வருகிறார்கள்.
நாகை
மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் மணக்காடு, தாணிக்கோட்டகம்,
கரியாப்பட்டினம், மூலக்கரை ஆகிய கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கர்
நிலத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியின் கடைமடைப் பகுதியான
இங்கு காவிரிநீர் ஆறு வழியாக ஒருமுறை மட்டுமே எட்டிப்பார்த்தது. இரண்டு
முறை பொழிந்த மழைநீரும் விவசாயத்துக்கு உதவியது. அதன் பின் ஆறு, குளம்,
வாய்க்கால்களில் தேங்கிக் கிடந்த நீரை மோட்டார் மூலம் வயலுக்குப்
பாய்ச்சினார்கள். பயிர் வளர்ந்து இறுதிக்கட்டத்தில் சூல் வெடித்து
நெற்கதிர் வரும் நிலையில் தற்போது, நீரின்றி காய்ந்து கருகி வருகிறது.
இந்நிலையில், மேட்டூர்
அணையும் மூடப்பட்டதால் காவிரி நீர் ஆற்றில் வருவதற்கு வழியில்லை. மழைப்
பொழிவுக்கும் வாய்ப்பில்லை. கருகும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் வேறு
வழியின்றி டேங்கர் லாரியில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி
வயலுக்குப் பாய்ச்சும் அவலநிலைக்கு ஆளாகிவிட்டார்கள். -ஒரு டேங்கர் லாரி
தண்ணீர் ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேற்கண்ட
கிராமங்களில் விவசாயிகளின் தண்ணீர்த் தேவைக்காக 20-க்கும் மேற்பட்ட டேங்கர்
லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். ஒரு ஏக்கர்
நிலத்துக்கு குறைந்தபட்சம் 15 டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படுகிறது.
ஏற்கெனவே கடன் வாங்கி சாகுபடி செய்து கவலையில் வாடும் விவசாயிகளுக்கு
கூடுதல் சுமையாகத் தண்ணீர் செலவும் சேர்ந்திருக்கிறது.
கரைபுரண்டு
வந்த காவிரி நீரால் முப்போகம் சாகுபடி செய்த தமிழக விவசாயிகள் இன்று ஒருபோக
சாகுபடிக்கே தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலத்தை மத்திய, மாநில அரசுகள்
இன்னமும் உணரவில்லை என்பதுதான் வேதனை.

No comments:
Post a Comment