Latest News

உயிர்காக்கும் மருந்துக்கு `திடீர்' தட்டுப்பாடு: அரசை மிரட்டுகின்றனவா உற்பத்தி நிறுவனங்கள்..?

பென்சதைன் பென்சிலின் என்னும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துக்கு மார்க்கெட்டில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் மருந்துகளில் ஒன்று பென்சதைன் பென்சிலின் (Benzathine Penicillin). ரிமோட்டிக் இருதய வியாதி என்று அழைக்கப்படும் இருதய வால்வு அடைப்பால் அவதிப்படுகிறவர்கள் இந்த மருந்தை 20 நாள்களுக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொண்டை வலி உள்பட வேறுபல சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படும். யானைக்கால் வியாதியால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த மருந்து முக்கியமானது ஆகும். இதன் தேவை கருதி அரசு இந்த மருந்தை விலைக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. அனைவருக்கும் எளிதாக இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

பென்சதைன் பென்சிலின், 6 லட்சம், 12 லட்சம், 24 லட்சம் யூனிட்டுகள் என்ற அளவில் விற்பனைக்கு வருகிறது. 12 லட்சம் யூனிட் மருந்தே அதிகம் பேருக்கு போடப்படுகிறது. ஜி.எஸ்.டி-யில் சமீபத்தில் இந்த மருந்துக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. மருத்துவர்கள், மருந்தகங்களுக்கு மொத்த விலையில் ரூ.10-க்கு இந்த மருந்து கிடைக்கிறது. இதன் சில்லறை விலை ரூ.12.11 ஆகும். இந்திய மருந்துச் சந்தையில் முக்கிய மருந்தான இதற்கு கடந்த 3 மாதங்களாகத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது சாமானியர்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. இருதய நோயாளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தியிடம் பேசியபோது, "பென்சதைன் பென்சிலின் உயிர் காக்கும் முக்கிய மருந்தாகும். அதற்காகத்தான் அரசு இதை விலைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், கடந்த 3 மாதகாலமாக இந்த மருந்து மொத்த விற்பனையில் கிடைக்கவில்லை. மொத்த விற்பனையில் இந்த மருந்து ரூ.10-க்கு கிடைக்கும். இப்போது சில்லறை விற்பனை வியாபாரிகளிடமிருந்து இந்த மருந்தை ரூ.12.11 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இந்த விலையேற்றச் சுமையை ஈடுகட்ட நாங்கள் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

மருந்து ஒழுங்காகக் கிடைக்காததற்கு என்ன காரணமென்று கேட்டால் சரியான பதில் இல்லை. இந்த மருந்தை விற்பதால் பெரிய லாபம் இல்லை; அதனால் வாங்குவதை நிறுத்திவிட்டோம் என்று மொத்த விற்பனையாளர்கள் தரப்பு சொல்கிறது. தவிர, இந்த மருந்தைத் தயாரிப்பதால் பெரிய லாபம் இல்லை என்பதால் உற்பத்தியை நிறுத்திவிடப்போவதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசை மிரட்டி வருகின்றன. இவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு அப்பாவி சாமானிய மனிதன் மருந்து கிடைக்காமல் அல்லாடுகிறான். அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு பென்சதைன் பென்சிலின் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இது பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டது. அரசின் நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.