
சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸ்
நிலையத்துக்குக் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்த இளம் பெண்,
இன்ஸ்பெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நர்மதா. இவர், ஜெ.ஜெ.நகர் போலீஸ்
நிலையத்துக்கு வந்தார். அவரது கையில் பெட்ரோல் பாட்டில் இருந்தது. போலீஸ்
நிலையத்துக்குள் செல்ல முயன்ற நர்மதாவை போலீஸார் தடுத்து விசாரித்தனர்.
அப்போது, அவர் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து 'இந்த
இன்ஸ்பெக்டர் இருக்கும் இடத்தில் நியாயம் கிடைக்காது' என்று கூறியதோடு
அவர் வைத்திருந்த பெட்ரோலை அங்கு ஊற்றியுள்ளார்.
அடுத்து, அவர் போலீஸ் நிலையத்தை கொளுத்த முயற்சி செய்துள்ளதாகக்
கூறப்படுகிறது. அதைப்பார்த்த போலீஸார் நர்மதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி,
பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றினர். அதன்பிறகு, அவரை திருமங்கலம் போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "நர்மதா, அந்தப் பகுதியில்
உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு அந்தப்
பணியை அவர் ராஜினாமா செய்துவிட்டு சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.
நர்மதாவுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே தகராறு
இருந்துவந்துள்ளது. இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் நர்மதா
புகார் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு இன்ஸ்பெக்டர் முருகேசன்
பணியாற்றியுள்ளார். நர்மதாவின் புகாருக்கு இன்ஸ்பெக்டர் நடவடிக்கை
எடுக்கவில்லை. தற்போது முருகேசன், ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்கு
இடமாறுதலாகிவிட்டார். தன்னுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்காத
இன்ஸ்பெக்டரைக் கண்டித்துதான், பெட்ரோல் பாட்டிலுடன் ஜெ.ஜெ.நகர் போலீஸ்
நிலையத்துக்கு வந்துள்ளார். பெட்ரோலை போலீஸ் நிலைய வளாகத்தின் அருகே
ஊற்றியுள்ளார். அதற்குள் போலீஸார், நர்மதாவை மடக்கிப்பிடித்து அழைத்துச்
சென்றுவிட்டனர். நர்மதாவிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை
நடத்திவருகின்றனர்" என்றனர்.
No comments:
Post a Comment