Latest News

மின் விநியோகத்தைப் பாதிக்குமா நாளைய மின் ஊழியர் வேலைநிறுத்தம் ?

இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள மின் ஊழியர் வேலைநிறுத்தம், நாளை நடந்தேதீரும் என மின்வாரிய கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் மின் உற்பத்தியும் விநியோகமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களைப் போல இவர்களும் தொடர் போராட்டத்தில் இறங்கினால், மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும். 

தமிழக மின்சார வாரியத்தில் 72 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள், 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள், 6 ஆயிரம் பகுதிநேர ஊழியர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை 2015 டிசம்பரில் புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், 27 மாதங்களாக புதிய ஒப்பந்தம் செய்யப்படாமல் இழுத்தடிப்பதாக, பல மாதங்களாக மின்வாரியப் பணியாளர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

அதையடுத்து மின்வாரியத்தின் தரப்பிலிருந்து வரைவு ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டு, அதன் மீது தொழிற்சங்கங்கள் கருத்துத் தெரிவித்தன. அதன் பிறகும் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த உரிய நடவடிக்கை இல்லை எனத் தொழிற்சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. அதையடுத்து, கடந்த ஜனவரி 23 ம் தேதி காலையில் தொடங்கி 24 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகக் கூட்டுப் போராட்டக் குழுவினர், 15 நாள்களுக்கு முன்னரே நிர்வாகத்திடம் தெரிவித்தனர். 

அதையடுத்து, தொழிலாளர்நலத் துறை ஏற்பாட்டில் சென்னை, தேனாம்பேட்டையில் ஜன.22 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் முடிவில், பிப்.12 ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என வாரியத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்ற கூட்டுப் போராட்டக் குழுவினர், அதுவரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்தனர். அதன்படி அன்று மாலையில் நடந்த பேச்சுவார்த்தையில், பாதியிலேயே எழுந்துசென்றதால் தோல்வியடைந்தது.
அப்போது அறிவிக்கப்பட்டபடி, (15 ம் தேதி) இன்று தொழிலாளர் நலத்துறையின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தொழிற்சங்கத் தலைவர்களிடம், நிர்வாக காரணங்களால் பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதனால், திட்டமிட்டபடி நாளை பிப்.16 ம் தேதியன்று வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனக் கூட்டுப் போராட்டக் குழு அறிவித்தது. 

இது தொடர்பாக கூட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியைச் சந்தித்துப் பேசினோம்.
அப்போது, " 27 மாதங்களுக்கு முன்னர் முடிந்துபோன ஊதிய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், இழுத்தடித்துவருகிறார்கள். மின்வாரியத் தரப்பிலும் வரைவு முன்வைக்கப்பட்டு, மூன்று முறை தொழிற்சங்கங்கள் சார்பில் கருத்தும் தெரிவித்துவிட்டோம். இடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைக் காரணம்கூறினார்கள். மின்வாரியத் தரப்பில் வரைவை முன்வைத்தனர். 24 ம் தேதி போராட்டம் அறிவித்தநிலையில், 22-ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். மறுநாள் ஒப்பந்தம் செய்யப்படும் என இருந்தநிலையில், பேச்சு தள்ளிப்போனது. காரணம், ஊதிய உயர்வைக் குறைக்கும் நிதித்துறைச் செயலாளரின் கடிதம். அதையடுத்து, 29 ம் தேதியன்று எங்களிடம் சொல்லாமல் இடைக்கால நிவாரணத்தை அறிவித்தனர். அண்மைக்காலத்தில் மின்வாரியத்துக்கு 4,100 கோடி ரூபாய் லாபம் வந்துள்ளநிலையில், 27 மாதங்களுக்குப் பாக்கியிருக்கையில், நான்கு மாதங்களுக்கு மட்டும்தான் இந்த நிவாரணம் என்பது எப்படி நியாயமானது? இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையையும் நிர்வாகக் காரணத்தால் தள்ளிவைப்பதாகச் சொல்லிவிட்டார்கள். நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும்" என்று கூட்டுப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். சுப்பிரமணி.
வழக்கமாக ஊழியர் வேலைநிறுத்தம் நடக்கும்போது தள்ளிநிற்கும் பொறியாளர்களும் இந்த முறை போராட்டத்தில் குதித்துள்ளனர். 
 
தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருள்செல்வன், " பொதுப்பணி, போக்குவரத்துத் துறைகளைப்போல அல்லாமல், மின்வாரியப் பொறியாளர்களின் பணியானது, 24 மணி நேரப் பொறுப்புகொண்டது. எங்களுக்கும் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை ஊழியர்களோடு சேர்ந்து ஊதிய ஒப்பந்தம் செய்துவருவதை, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றப்போகிறார்கள். இதைக் கண்டித்து நாங்களும் போராட்டத்தில் கலந்துகொள்கிறோம்" என்றார். 

ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்துடன் திமுகவின் தொமுசவும் கைகோத்துக்கொண்டுள்ளது என்றாலும், 10 சங்கங்களைக் கொண்ட கூட்டுப் போராட்டக் குழுவினர் தங்களின் முடிவில் உறுதியாக உள்ளனர். நான்கு அனல்மின் நிலையங்கள் உட்பட மின் உற்பத்திநிலையங்கள் அனைத்திலும் வேலைநிறுத்தம் நடந்தால் ஒரு நாள் பிரச்னையைச் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்; அதற்கும் மேல் இழுபறி தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் மின்விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.