Latest News

  

காவிரி இறுதித் தீர்ப்பு! - அதிருப்தியில் தமிழக அரசியல் தலைவர்கள்

தமிழ்நாடு - கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.


'காவிரி நதி நீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எந்த மாநிலத்துக்கும் அந்த உரிமையில்லை' என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007-ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி அளவு கூடுதலாகத் தண்ணீர் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'இதுவே இறுதித் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்குச் செல்லும். மேல்முறையீடு செய்ய முடியாது' என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இறுதித் தீர்ப்பை வரப்வேற்பதாகக் கர்நாடகா தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்..

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

காவிரிநீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதோடு, தலைவர் கலைஞர் தமிழகத்துக்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றத்தில் பறிகொடுத்தது வேதனையளிக்கிறது. ஆகவே, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் உடனே கூட்ட வேண்டும்.

அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன்

காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கான பங்கு போதாது. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் பலர் உயிரை மாய்த்து கொண்டனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், மத்திய அரசு நிலுவையில் உள்ள கல்லணை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.

தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன்

அ.தி.மு.க அரசு காவிரி வழக்கை சரியாக நடத்தவில்லை. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட யாருடைய யோசனைகளுக்கும் அரசு செவிகொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு விழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.

தமிழக அமைச்சர் ஜெயக்குமார்

காவிரியை கர்நாடகா சொந்தம் கொண்டாடிய நிலையில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவிரி தீர்ப்பு பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்ட பிறகே கருத்துக் கூற முடியும்.

எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன்

காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை

தமிழகத்துக்கு காவிரி நீர் குறைப்பு என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கர்நாடகம் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துவருகிறது. காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்காமல் போனதுக்கு தி.மு.க-வின் பங்கும் உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க வேண்டும்.

ம.தி.முக பொதுச் செயலாளர் வைகோ

காவிரி வழக்கில் வில்லன் மத்திய அரசுதான். தமிழகத்தை நாசம் செய்யும் முடிவோடு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்ளது. காவிரி வழக்கில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபாலனிடம் பேசியபோது, சுமார் 410 டி.எம்.சி. காவிரி நீரைப் பெற்று முப்போகம் விவசாயம் செய்து வந்தோம். இடைக்கால தீர்ப்பு 205 டி.எம்.சி. என்றார்கள். ஒருபோக சாகுபடி குறைந்தது. அந்தத் தீர்ப்பின்படியும் தண்ணீர்த் தர மறுத்தார்கள். இறுதி தீர்ப்பு 192 டி.எம்.சி. என்றார்கள். குறுவை சாகுபடியை கைவிட்டோம். இப்போது, உச்ச நீதிமன்றம் 15 டி.எம்.சி. தண்ணீரை குறைத்திருக்கிறார்கள். 1 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கர் சாகுபடி செய்யலாம். அந்த வகையில் சுமார் 90,000 ஏக்கர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், மேலும் வதைக்கும் தீர்ப்பு ஏற்புடையதல்ல" என்றார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன், "2007ல் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் நீரை வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அப்போதிருந்த காங்கிரஸ் அரசும் சரி, இப்போதுள்ள பி.ஜே.பி. அரசும் சரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை. காரணம், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதுதான். கர்நாடக அணைகள் நிரம்பி வழியும் உபரி நீரைதான் தமிழகத்துக்குத் தருகிறார்கள். இந்தத் தீர்ப்பு ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீரை தருவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் தருமா? காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போதாவது மத்திய அரசு அமைக்க முன்வருமா? இவையெல்லாம் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.