
சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு
வாயிலில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தும்
அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து 3
பேர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம்
கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மண்ணெண்ணெய்
ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்கள் அழகனம்பட்டியைச் சேர்ந்த முத்து
(50). பாப்பிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் (32). மாதங்காடு பகுதியைச்
சேர்ந்த கோவிந்தராஜ் வயது 35. இவர்கள் தலை முதல் கால் வரை மண்ணெண்ணெயை
ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியை எடுக்கும் நேரத்தில் காவல்துறையினர் இவர்களைக்
கைப்பற்றி இழுத்து வந்து தண்ணீர் ஊற்றிக் கழுவினர்.
இதுபற்றி அவர்களோடு வந்திருந்த பிரகாஷ் என்பவர், ''மண்ணெண்ணெய்
ஊற்றிக்கொண்டவர்களின் கிராமமான அழகனம்பட்டி, மாதங்காடு,
பாப்பிசெட்டிப்பட்டி போன்ற கிராமத்தில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்கள் பஸ் நிலையத்துக்கு வர வேண்டும்
என்றாலும், பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றாலும்,
ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும் புதுரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வர
வேண்டும். ஆனால், திடீரென பன்னீர்செல்வம், நடராசன், மதியழகன், முத்துசாமி,
குமார், முருகேசன் ஆகியோர் சேர்ந்து பாப்பிசெட்டிப்பட்டி ஆதிதிராவிடர்
ஸ்கூல் அருகே ரோட்டை குறுக்கில் பறித்துப்போட்டுவிட்டார்கள். இதனால்
நாங்கள் நடந்தோ டூவீலரிலோ குழந்தைகளைப் பள்ளிக்கூடம் கூட்டிப்போக
முடியவில்லை. கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து ஏற வர முடியவில்லை.
வழிப்பாதையைக்
குழிதோண்டி போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை
முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர
முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் இறந்துவிடலாம் என்று
முடிவெடுத்துதான் அவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள
முயற்சி எடுத்திருக்கிறார்கள்'' என்றார்.
No comments:
Post a Comment