
மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலை 6 மணிக்க பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
கொல்கத்தாவில்
இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூர்ஷிதாபாத் என்ற இடத்தில்
பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென
கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
இதனைக்கண்ட
அப்பகுதி மக்கள் சிறிய படகுகள் மூலம் பேருந்தில் சிக்கியிருந்தவர்களையும்
கால்வாய்க்குள் மூழ்கியவர்களையும் மீட்டனர். இருப்பினும் இந்த கோரவிபத்தில்
32 பயணிகள் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள்
மூர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பாரம்பூர் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும்
போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் ஆர அமர தாமதமாக
சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதனால்
ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாமதமாக வந்த போலீசார் மற்றும்
தீயணைப்புத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கற்களை வீசியும்
தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து
தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி
கூட்டத்தை கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல்
தெரிவித்துள்ளார்.

மேலும்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய்
காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு
அறிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தையும் முதல்வர் மமதா பானர்ஜி
பார்வையிட்டார்.

இதனிடையே
பேருந்து ஓட்டுநர் போனில் பேசியபடியே பேருந்தை இயக்கியதாகவும் அதிவேகமாக
சென்றதாகவும் விபத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலத்தின் மீது போனில் பேசியபடி அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த வாகனத்தின்
மீது மோதாமல் இருக்க பேருந்தை வளைத்த போது கட்டுப்பாட்டை இழந்து
கால்வாய்க்குள் பாய்ந்ததாகவும் விபத்தில் தப்பி பிழைத்தவர்கள்
தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment