
அமைச்சர் மணிகண்டன் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க கொடிக்கம்பத்தைச்
சேதப்படுத்தியதாக ஓ.பி.எஸ் ஆதரவாளரான தன் மீது பொய் வழக்கு
போடப்பட்டிருப்பதாக மாவட்ட மாணவரணி நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம்
புளிக்கார தெருவில் வசித்து வருபவர் விஜயராமகிருஷ்ணன். அ.தி.மு.க மாவட்ட
மாணவரணி பொருளாளர் பதவி வகித்து வரும் இவர், கட்சி இரு அணியாக செயல்பட்ட
போது ஓ.பி.எஸ் அணியின் நகர் பொருப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில்
அமைச்சர் மணிகண்டன் தூண்டுதலின் பேரில் தன் மீது கட்சி கொடி கம்பத்தைச்
சேதப்படுத்தியதாக பொய் புகார் கொடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு
செய்துள்ளதாக இவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விஜயராமகிருஷ்ணனிடம் பேசினோம். ''எம்.ஜி.ஆர்
பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மணிகண்டன் கட்சி நிர்வாகிகளை அழைக்காமல்
தனது ஆதரவாளர்களுடன் சென்று ராமநாதபுரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும்
கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்சிக்கு என்னை அழைக்காததால், நான்
அதில் கலந்து கொள்ளவில்லை. மேலும், அமைச்சரின் நடவடிக்கைகள் பிடிக்காத
நிலையில் அவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தேன். இதனால் என் மீது
வருத்தம் கொண்ட அமைச்சர் மணிகண்டன், எனது பகுதியான 21-வது வார்டில்
ஏற்றப்பட்ட கட்சி கொடியினை நான் சேதப்படுத்தியதாக, எனது தெருவில் வசிக்கும்
மணிகண்டன் என்பவரது மூலமாக பொய் புகார் கொடுக்க வைத்துள்ளார்.
இந்த
புகாரினை விசாரித்த கேணிக்கரை போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்து
காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். இந்த வழக்கில் நான் பிணையில் வெளிவந்த
நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக, என் மீது மீண்டும் ஒரு பொய் புகார்
கொடுக்கப்பட்டது. இதனால், போலீஸார் என்னை அவமானப்படுத்தும் வகையில் காவல்
நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த மாவட்ட செயலாளர் மற்றும்
கட்சி நிர்வாகிகள் என்னை காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
தனக்கு வேண்டாதவர் என்ற காரணத்திற்காக சொந்த கட்சிகாரர் மீதே வழக்கு போட
தூண்டிய அமைச்சர் மணிகண்டனின் செயல் குறித்து கட்சி தலைமையிடம் புகார்
செய்ய உள்ளேன்'' என்றார். மாற்றுக் கட்சிக்காரர்கள், மாவட்ட அதிகாரிகள் என
அனைவருடனும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமைச்சர் மணிகண்டன், தற்போது
சொந்தக் கட்சிக்காரர் மீதே பொய் புகார் கொடுத்திருப்பது ராமநாதபுரம் நகரில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment