வடகொரியா மீதான போர் என்று சமீபத்திய பிரசித்தமான அரசியல் பேச்சுகள்
வளர்ந்து வரும் நிலையில் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? வடகொரியாவா?
அமெரிக்காவா என்பதை அறுதியிட வேண்டியுள்ளது.
அமெரிக்க அயல்நாட்டுக்
கொள்கைகளை விமர்சிக்கும் சிலர் கூறிவருவது போல் அமெரிக்க தலைவர்கள், அதன்
ஊடகங்கள், அதன் குடிமக்கள் ஆகியோர் தங்கள் நாடு அயல்நாடுகளில் என்ன
செய்திருக்கிறது என்ற வரலாறு பற்றி கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள்
என்பதே. அல்லது வடகொரியாவுடனான நீண்ட கால முரண்பாடுகள் பற்றிய வரலாற்றை
மறந்தவர்களாக இருக்கின்றனர்.
இரண்டாம்
உலகப்போரின் போது ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் அழித்த நகரங்களை விட
வடகொரியாவில் அழித்த நகரங்களின் எண்ணிக்கை அதிகம். அவ்வளவு குண்டுகளை
வடகொரிய நகரங்களில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா வீசியுள்ளது.
சிலபல நகர்ப்புற இடங்கள் தாக்குதலுக்கு மீதமிருந்த போது கூட அமெரிக்கப் படை
நெல் உற்பத்திக்குக் காரணமாக விளங்கும் அணைகளின் மீது குண்டுகளை போட்டனர்.
இதனால் பெரிய அளவில் பஞ்சம், பசி, பட்டினி ஏற்பட்டது என்பதையும்
சவுகரியமாக மறந்து விட்டனர். தங்கள் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட
நாசவேலைகளை வடகொரியர்கள் அவ்வளவு எளிதில் மறப்பவர்களல்லர்.
அமெரிக்கா
சிறிய நாடுகளில் மேற்கொண்ட சட்ட விரோத ராணுவத் தலையீடுகளினால்தான்
அந்நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை குறைந்த விலையில்
உற்பத்தி செய்யத் தொடங்கின.
இராக்கில் சதாம் ஹுசைனை அழிக்க இராக்கில்
படையெடுத்தது. பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருந்ததாக புஷ் நிர்வாகம்
முழுப் பொய்யை அவிழ்த்துவிட்டது. அதேபோல்தான் லிபியா அதிபர் கடாஃபிக்கு
எதிராகவும் திட்டம் தீட்டி படையெடுப்பு நடத்தப்பட்டது. ஈரானையும்
இப்படித்தான் அமெரிக்கா “உலக அமைதிக்கு பெரும் கேடு விளைவிக்கும் நாடு”
என்று முத்திரை குத்தியது, ஆனால் அமெரிக்காவின் 200 ஆண்டுகால படையெடுப்பு
அழிவு வரலாற்றில் ஈரான் மீது படையெடுக்க முடியவில்லை.
தொடர்ந்து தென்
அமெரிக்க நாடுகள், சோவியத் சார்பு நாடுகள் என்று அமெரிக்கா குறிவைத்து
வருகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தில் இது இன்னமும் மோசமடைந்துள்ளது. அவரது போர்
முழக்க பேச்சுகளினால் பிற நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக அல்லது
அச்சுறுத்தலுக்காக அணு ஆயுதங்களை நோக்கிச் சென்றுள்ளன. வியட்நாம், கியூபா,
வெனிசூலா என்று அமெரிக்காவுக்கு நீண்ட ரத்த வரலாறு உள்ளது.
ஊடகங்களின்
பிரச்சாரங்களுக்கு வெளியே உண்மையில் வடகொரியா தன் அணு ஆயுதத் திட்டங்களைக்
கைவிடுவதாக தங்கள் நிலைப்பாட்டை வழங்கி வந்தது. மாறாக ஏகப்பட்ட ஆயுதக்
குறைப்பு ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட்ட போதும், அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவின் அணுஆயுத இருப்பை 10 மடங்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று
கூறி வருகிறார்.
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தொடர்ந்து
மற்ற நாடுகளுக்கு இவர்கள் மறுக்கும் அணு ஆயுதத் திறன்களை தக்க
வைத்துள்ளனர். பன்னாட்டுச் சட்ட விதிகளை மீறுகின்றனர். வடகொரியாவில்
நடக்கும் ஏகப்பட்ட மனித உரிமைகள் மீறலை சரியாக விமர்சிக்க வேண்டிய அவசியம்
உள்ளதுதான், ஆனால் நோம் சாம்ஸ்கி கூறுவது போல் எந்த ஒரு ஆட்சியின்
‘உள்நாட்டு கொடூரங்களுக்கும் அதன் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும் தர்க்க
ரீதியான தொடர்பு இல்லை’ என்பதும் கவனிக்கத்தக்கது.
அமெரிக்கா மெல்ல
மெல்ல அடக்குமுறை சமூகமாக சீரழிந்து வருகிறது. காரணம் அதன் உள்நாட்டிலேயே
ஏகப்பட்ட மனித உரிமைகள் பிறழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும்
வடகொரிய மக்களைக் காட்டிலும் அமெரிக்க குடிமக்கள் சில சுதந்திரங்களை
அனுபவித்து வருவது உண்மைதான்.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்துக்
கணிப்பு உலக அமைதிக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் தேசம் அமெரிக்காதான்
என்று கூறுகிறது. அயல்நாடுகளில் அமெரிக்காவின் நடத்தை எப்படி
இருந்திருக்கிறது என்பதை தீவிரமாக இல்லாவிடினும், ஒரு மேலோட்டமான பார்வையே
கூட உலகின் மிகப்பெரிய அணு ஆயுத அச்சுறுத்தல் நாடு அமெரிக்காதான் என்பது
தெரியவரும்.
மூலம்: கவுன்ட்டர் பஞ்ச்.
தமிழில் சுருக்கமாக: ஆர்.முத்துக்குமார்.
கட்டுரை
ஆசிரியர் ஜோஷுவா சோ பாஸ்டன் கல்லூரியில் சமீபத்தில் பட்டப்படிப்பு
முடித்தவர், ஆர்வமுள்ள விமர்சகப் பத்திரிகையாளர், நிறைய அரசியல் விமர்சனக்
கட்டுரை எழுதியுள்ள்ளார்.
No comments:
Post a Comment