Latest News

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மீறி நடப்பதாக புகார்; முத்தலாக்கை தடுக்க சட்டம் அவசியம்: தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கருத்து

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முத்தலாக் முறையை பின்பற்றுகிறவர்களை கட்டுப்படுத்த இது தொடர்பாக சட்டம் அவசியம் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

முத்தலாக் நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணை, உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முத்தலாக் முறைக்கு 6 மாதம் தடை விதிக்க வேண்டும்; அதற்குள் மத்திய அரசு முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதுகுறித்து சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி நேற்று கூறியதாவது:

முஸ்லிம்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்காக, உடனடியாக மூன்று முறை தலாக் என சொல்லும் முறை சட்டவிரோதமானது. இந்த முறைக்கு தடை விதித்து சட்டம் இயற்றவும் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ‘வாட்ஸ்அப்’ மற்றும் செல்போன் மூலம் தலாக் கூறி சிலர் விவாகரத்து செய்து வருவதாக புகார்கள் வருகின்றன.

3 ஆண்டு சிறை


எனவே, தலாக் முறையை தொடர்ந்து பின்பற்றுகிறவர்கள் கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் சட்டத்தை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும். சட்டத்தின்மூலம் மட்டுமே இந்த முறையை முற்றிலும் ஒழிக்க முடியும். இதனால் பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முஸ்லிம் பெண்களின் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயாரித்துள்ள இந்த வரைவின் நகல், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டவிரோதம் என்றும் மீறும் கணவன்மார்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வரைவு மசோதாவுக்கு ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.