Latest News

ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி



கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லப் பிள்ளையாக இருந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து இன்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். 

செரியன் நகர் 3-வது தெருவில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசுகையில், ''ஆர்.கே.நகர் தொகுதியில் 21-ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் மருது கணேஷை வெற்றிபெற வைக்க நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலே ஆதரவு தருகிற நேரத்தில் ஒன்றை உணர்ந்து பார்க்க வேண்டும். ஏதோ ஒரு இடைத்தேர்தலாக நீங்கள் இதை கருதி விடக்கூடாது. வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு அதுவும் மிகமிக விரைவில் வரவிருக்கும் இன்னும் அழுத்தம் திருத்தமாக சொன்னால், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நிச்சயம் தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கிறது.

அந்தத் தேர்தல் வருவதற்கும் இந்த இடைத்தேர்தல் பயன்பட வேண்டும், அப்படி வருகிற தேர்தலில் நம்முடைய திமுக ஆட்சி தமிழகத்தில் உருவாவதற்கும் இந்தத் தேர்தல்தான் பயன்படப் போகிறது என்பதை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அந்த உணர்வோடு நீங்கள் எல்லாம் உதயசூரியனுக்கு ஆதரவு தர வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய ஒரு 17 ஆண்டுகாலம், அதிமுகவின் வசம் இருந்து வந்திருக்கிறது. 17 ஆண்டுகாலம் அதிமுக வசம் மட்டுமல்ல இந்த தொகுதியில் இருந்துதான் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் என்ற பொறுப்பிலும் அமர்ந்திருந்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அப்படிப்பட்ட பொறுப்பில் இருந்த ஜெயலலிதா மறைந்த காரணத்தால்தான் இந்த இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தல் வருவதற்கு அவருடைய மறைவு எந்த வகையில் எனக்கேட்டால், அது ஒரு மர்மமான நிலையில்தான் இருந்து இருக்கிறது.

அந்த மறைவு குறித்து விசாரணைக் கமிஷன் வைத்து விசாரிக்கும் நிலைமை இன்றைக்கு நாட்டிலே உருவாகி இருக்கிறது. நேற்றைய தினம் அவர் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனையின் டீன் டாக்டர் ரெட்டி தன்னுடைய பேட்டியில் ஒரு செய்தியைச் சொல்லுகிறார். ஜெயலலிதா எங்களுடைய அப்போலோ மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நினைவிழந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில்தான் அனுமதிக்கப்பட்டார், பேச்சு மூச்சு இல்லாத நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என ஒரு பேட்டியிலே சொல்கிறார். 

அப்படியென்றால், அதை ஏன் நீங்கள் முன்கூட்டியே சொல்லவில்லை? சாப்பிட்டார், இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், உடற்பயிற்சி செய்தார் என்றெல்லாம் செய்திகள் வந்ததே, பிறகு ஏன் நீங்கள் இப்படிப்பட்ட நிலையில் செய்திகள் சொல்லப்பட்டது என கேட்கிற நிலையில், மேலிடத்தில் இருப்பவர்கள் அந்தச் செய்தியை சொல்லக்கூடாது என என்னை தடுத்து விட்டார்கள் என டாக்டர் ரெட்டி பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் ஓபிஎஸ்தான் தமிழ்நாட்டின் முதல்வர். அவர்தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கே காரணமானவர் என்பது ரெட்டியின் பேட்டியில் வெளிப்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் மட்டுமா? அவரின் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டவர் இன்றைய முதல்வர் ஈபிஎஸ். இருவரும் சேர்ந்தது மட்டுமல்லாமல், அடிக்கடி சொல்வார்கள் நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறோம் என்று, நான் சொல்கிறேன், மூன்று குழல் துப்பாக்கிகளாக சசிகலாவும் சேர்ந்துதான் கூட்டாளியாக இருந்து இந்த மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கிறார்கள் என்ற அந்தச் செய்தி இப்போது வெளிப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த இடைத்தேர்தலும் இந்த தொகுதிக்கு வந்திருக்கிறது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலை எந்த நேரத்திலும் திமுக சந்திக்க இருக்கிறது அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இரண்டு நாட்களாக இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா எந்த நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அணி ஓட்டுக்கு 6000 ரூபாய், இன்னொரு அணி ஓட்டுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நான் இன்று காலை கூட தேர்தல் ஆணையம் சென்று லக்கானியிடம் மட்டுமல்ல, மத்தியில் இருந்து இந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியையும் சந்தித்து நேற்றும் , நேற்று முன் தினமும் நடந்து கொண்டிருக்கும் பணப் பட்டுவாடாவில் முதல்வரே பொறுப்பேற்று பணப் பட்டுவாடா செய்வது பற்றியும், எந்தெந்த அமைச்சர்கள் எல்லாம் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது பற்றி பொத்தாம் பொதுவாக இல்லாமல் ஆதாரங்களோடு கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் எனக் கேட்டோம். 

பக்கத்தில் இருக்கும் கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லப் பிள்ளையாக இருந்தாலும் இந்த ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம் என்கிற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் பேசினார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.