Latest News

முதல்வர் அதிகாரம் துஷ்பிரயோகம்; சசிகலாவுக்கு எதிராக பொது நல வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்போம் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை


ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது முதல்வரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரும் வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள் சிகிச்சை பலனின்றி டிச.5 அன்று மரணமடைந்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த கால கட்டத்தில் முதல்வரின் அதிகாரத்தை சசிகலா துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், சென்னை மாநகராட்சி வழக்கறிஞருமான டாக்டர் கே. சரவணன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடமும், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காவல்துறை மெத்தனமாக இருப்பதால், வழக்குப்பதிவுசெய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, விசாரணைக் ஆணையம் அமைத்ததன் மூலம், அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை, நிர்வாக அறிவுறுத்தல்களை சசிகலாவே வழங்கியுள்ளார் என்பதும், சசிகலா முதலமைச்சரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவில் எந்த பொது நலமும் இல்லாதபோது மனுதாரர் என்ன நோக்கத்தோடு வழக்கை தொடுத்துள்ளார் என கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயலலிதா சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பர நோக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ளது, எனவே மனுதாரருக்கு ரூ.1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தார். 

இதனையடுத்து வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக மனுதாரரின் கருத்தையறிந்து தெரிவிப்பதாக வழக்கறிஞர் கூறியதையடுத்து, வழக்கை டிசம்பர் 7-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.