தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரின்
நினைவிடத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும்
தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதற்காக அண்ணா சாலையில் இருந்து
மெரினா கடற்கரை வரை அமைதிப்பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில்
கலந்துகொள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து
தொண்டர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் சென்னையில் குறிப்பாக
அண்ணா சாலை, காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கடற்கரையின் கிளை சாலைகளிலும் போக்குவரத்துப் பிரச்சினை
ஏற்பட்டது. நெரிசலின் தொடர்ச்சி அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியதால்
சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் நகரம் முழுவதும் சுமார் 1,500 போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதையடுத்து
சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் தங்கள் புலம்பலை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பொன்னி என்பவர், ''இந்த நாள்
எண்ணிக்கையில்லாத பேனர்களுக்கும், ஏராளமான நெரிசலுக்குமான நாள். ஒரு வருடம்
ஆகிவிட்டாலும் மர்மங்கள் விலகியபாடில்லை'' என்றார்.
ஜெயராம் என்பவர்
கூறும்போது, ''ஜெயலலிதா நினைவுநாள் விழாவில் சென்னை நகரம் முழுவதும்
நெரிசலில் சிக்கியிருக்கிறது. அபாயகரமான, உணர்ச்சியற்ற அரசாங்கம் மக்களை
வெளியே போகச் சொல்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
துளசிபிரியா
என்பவர் கூறும்போது, ''ஆலந்தூர் மெட்ரோ நிலையத்துக்கு அருகில்
வைக்கப்பட்டுள்ள பேனர், முழு நடைபாதையையே மறித்து நிற்கிறது'' என்று
புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
போக்குவரத்து நெரிசல் குறித்துப் பதிவிட்ட மற்றொருவர், ''ஏ1
குற்றவாளியின் புகைப்படங்களும் பேனர்களும் நகரம் முழுக்க வைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே, போக்குவரத்தால் மெரினா திணறுகிறது, பத்திரம்!'' என்று
கூறியுள்ளார்.
சுரேஷ் என்பவர் கூறும்போது, ''சென்னை ஸ்தம்பித்து
நிற்கிறது. அண்ணா சாலை, சென்ட்ரல், எழும்பூரில் முழுமையான போக்குவரத்து
துண்டிப்பு. பொதுமக்களின் மீதான அக்கறையின்மையும் திட்டமிடாததும் தெளிவாகத்
தெரிகிறது. சென்னை காவல்துறை என்ன செய்கிறது?'' என்று கேள்வி
எழுப்பியுள்ளார்.
ஆனந்த் விஸ்வநாதன் பதிவில், ''இறந்த ஓராண்டுக்குப்
பிறகும் ஜெயலலிதா! சென்னைப் போக்குவரத்து நெரிசல், ஊர்வலம், வண்டிகளைத்
திருப்பி விடுவது, ஆம்புலன்ஸ்கள் நிராதரவாக நின்றது உள்ளிட்ட கொடுமைகளை
அரங்கேற்றி இருக்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment