ராஜஸ்தானின் பரண், உதய்பூர்
மாவட்டங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து பட்டினிச் சாவுகள்
ஏற்பட்டன; பட்டினி காரணமாகவோ அரசின் செயலிழந்த தன்மை காரணமாகவோ மக்கள்
இறக்கிறார்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்க அப்போதைய அரசு
என்னென்னவோ கட்டுக்கதைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டது. அக்டோபர் 2017-ல்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தோஷி குமாரி என்ற பட்டியல் இனத்து 11 வயதுச்
சிறுமி இறந்தது பத்திரிகைகளில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது. “அம்மா,
கொஞ்சமாவது சோறு கொடும்மா” என்று கேட்ட அந்தக் குழந்தை, அப்படியே
சுயநினைவிழந்து இறந்துவிட்டது. அந்தக் குழந்தை மலேரியாவால்தான் இறந்தது
என்று மாநில அரசு வாதிட்டது.
சந்தோஷிக்குக் காய்ச்சல் ஏதும் இல்லை என்று ஊடகப் பேட்டியில் அவளுடைய
தாயார் கோய்லி தேவி போட்டு உடைத்தார். சந்தோஷியின் மரணத்துக்குப் பிறகுதான்
மேலும் பலர் பட்டினியால் இறந்தது ஒவ்வொன்றாக வெளிப்பட்டது. அவர்களில்
ரூப்லால் மாரண்டி என்பவர் அரசின் ‘ஆதார்’ இணைப்பு சோதனையான ‘அப்பா’
முறைக்கு (ABBA) பலியாகிவிட்டார்.
2002-ல்
ஏற்பட்ட பட்டினிச் சாவுகளைத் தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான மக்கள் நலத்
திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசின் கிடங்குகளில் இருக்கும் அரிசி,
கோதுமைகளை நல்ல நிலையில் இருக்கும்போதே ஏழைகளுக்கு விநியோகித்தால் என்ன
என்று நீதித் துறை தலையிட்டது. அதற்குப் பிறகு பொது விநியோகத் திட்டம்
(பிடிஎஸ்) மட்டுமல்ல வேறு சில வழிகளிலும் பரிகார நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன. பரண் மாவட்டத்தில் சஹாரியா என்று அழைக்கப்படும் பழங்குடி
சமூகத்தவரின் மோசமான சமூக நிலை உணரப்பட்டு அவர்களுக்கு இலவசமாக பருப்பு
வகைகளும் நெய்யும் கூடத் தரப்பட பொது விநியோக முறை பயன்படுத்தப்பட்டது.
ஆனால்,
இன்றைய அரசோ நடந்ததையே மூடி மறைத்து மறுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த
அக்டோபரில் மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்ட ஆணை, தவறான தகவல்களின் பேரில்
ரத்தான ரேஷன் அட்டைகளைப் பயனாளிகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று
கூறாமல் மெளனம் சாதிக்கிறது. நிச்சயம் அமல்படுத்த வேண்டும் என்ற
கட்டாயமில்லாமல், ஒப்புக்குச் சில வழிகாட்டல்களை வெளியிட்டது.
பொது
விநியோக முறை (ரேஷன்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்
திட்டம், ஓய்வூதியம் போன்றவற்றின் பயனாளிகள் ஒவ்வொருவரின் பெயருக்கு
நேராகவும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு
வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத் தலைவருடைய
பெயர் மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய பெயரும் இணைக்கப்பட
வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பயனாளியின் கருவிழி, கைரேகைகள்
போன்ற அடையாளங்களுடனான சான்றுரைப்பு கட்டாயம் என்கிறது. அத்துடன் பொருள்
வாங்கும் ஒவ்வொரு முறையும் பயனாளி யின் கைவிரல் ரேகை, ரேஷன் கடையில் உள்ள
பிஓஎஸ் கருவியில் வைக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு
பெயருக்கும் நேராக ஆதார் எண்ணை இணைப்பதுடன், அதைச் சரிபார்ப்பதும்
கட்டாயமாக்கிவிட்டது.
‘ஆதார்’ எண் இணைப்பை 100% நிறைவேற்றிவிட்டதாகக்
காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் (அல்லது கட்டாயத்தில்), களப் பணியாளர்கள்
பலர், ஆதார் எண்ணைப் பெறாதவர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து தாங்களாகவே
நீக்கிவிட்டனர். ஒரு கெடு தேதியைக் குறிப்பிட்டு, அந்தத் தேதிக்குள் ஆதார்
எண்ணைப் பெறத் தவறியவர்களின் பெயர்களையும் நீக்கினர். ‘ஆதார் எண்ணை இணைக்க
வேண்டும் என்று சொன்னதால் லட்சக்கணக்கில் போலிப் பயனாளிகள் அடையாளம்
காணப்பட்டு நீக்கப்பட்டனர், அதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மானியம்
மிச்சமாகிவிட்டது’ என்று அரசு இதையே சாதனையாக அறிவித்துக்கொள்கிறது.
“அவர்கள் ஆதார் எண்ணை இணைக்கத் தவறியதால், கடந்த ஜூலை மாதம் ரேஷன் அட்டை
ரத்துசெய்யப்பட்டது” என்று கூறுகிறார் ஜார்க்கண்ட் உணவு அமைச்சர்.
அவர்கள்
ஏன் ‘ஆதார்’ எண்ணைப் பெறவில்லை என்று தெரிந்துகொள்ளாமல்
பாதிக்கப்பட்டவர்களையே, பட்டினிச் சாவுக்கு அவர்கள்தான் காரணம் என்று பலர்
சாடுகின்றனர். ‘ஆதார்’ எண்ணைப் பெறுவது முதல் படி, அதைக் குடும்பத்தின்
ஒவ்வொரு பயனாளிக்கும் எதிராக அட்டையில் பதிவுசெய்வது என்பது இரண்டாவது படி.
பயனாளிகளில் பெரும்பாலானவர்கள் எழுத்தறிவு இல்லாதவர்கள். அவர்கள் ‘ஆதார்’
எண் பெறுவதுடன் எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிடுகின்றனர்.
ஜார்கண்டில்
ஏராளமான ஓய்வூதியர்கள் மாத ஓய்வூதியம் வரவில்லை என்ற போது அதற்கான காரணம்
தெரியாமல் திகைத்துள்ளனர். யாரைக் கேட்பது, ஏன் நின்றது என்று கூடத்
தெரியாமல் இருந்திருக்கின்றனர். ‘ஆதார்’ எண்ணை இணைக்க வேண்டும் என்று மாநில
அரசோ, துறை அதிகாரிகளோ அவர்களுக்குக் கூறவில்லை. வேறு சிலரோ இணைக்க
முயன்றும் முடியாமல் தோற்றுவிட்டனர். பலரும் நினைப்பதைப் போல பயனாளிகளின்
பெயருக்கு எதிராக ‘ஆதார்’ எண்ணை இணைப்பது மிகச் சுலபமான வேலையுமல்ல.
பொது
விநியோகத் துறையின் பலனை ஏராளமானோர் பெற முடியாமல் தடுப்பனவற்றில் ‘ஆதார்’
பெயர் சேர்ப்பு ஓர் அம்சம் மட்டுமே; ரேஷன் கடைகளில் பொருட்களை
வாங்கும்போது மின்தடை ஏற்பட்டால் பிஓஎஸ் மெஷின், இணையதள இணைப்பு, மொபைல்
இணைப்பு ஆகிய மூன்றும் செயல்படாது. அப்போது ரேஷன் பொருளை வழங்க முடியாது
என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அத்துடன் தரவுகளைச் சரிபார்க்க
உதவும் கணினி ‘சர்வர்கள்’ வேலை செய்யாவிட்டாலும் பொருட்களை வாங்க முடியாது.
அது வேலை செய்தால்தான்
ரேகைகளைச் சரிபார்க்க முடியும். ரூப்லால் மாரண்டியின் குடும்பத்தார்
‘ஆதார்’ எண்ணை வாங்கிவிட்டனர், அதை ரேஷன் அட்டையில் ஒவ்வொருவர் பெயருக்கும்
நேராக பதிந்தும்விட்டனர். அதைச் சரிபார்க்கும் நிலையில்தான் கோளாறு
ஏற்பட்டுவிட்டது. அதனால் அந்தக் குடும்பமே பயனாளர் திட்டத்திலிருந்து
விலக்கப்பட்டது. கடைக் குச் சென்று விரல் ரேகையைக் கருவியில் வைத்தால்,
சரியில்லை என்று கூறி அது நிராகரித்தது. இப்படிச் சிலமுறை செய்ததால்
அவர்கள் ரேஷன் கடைக்குப் போவதையே நிறுத்திவிட்டனர். இதனால் அரிசி வாங்க
முடியாமல் பட்டினியால் என் தந்தை இறந்துவிட்டார் என்று மராண்டியின் மகள்
தெரிவிக்கிறார்.
‘அப்பா’ என்று அழைக்கப்படும் இந்த உயிரி
அடையாள சரிபார்த்தல் சரியாக வேலை செய்வதில்லை. நிதியமைச்சகம்
வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையே இந்த உயிரி அடையாளம் பல
சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ராஜஸ்தானில்
அரசின் தரவுகள், கடந்த ஆண்டில் 70% அட்டைதாரர்கள் வெற்றிகரமாக இதைப்
பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறது. மற்றவர்கள் விலகிவிட்டார்கள் அல்லது
விலக்கப்பட்டுவிட்டார்கள். அடுத்தடுத்து இணைப்பு பெறாமல் தோல்விகள்
ஏற்பட்டதால் சலிப்படைந்து, இனி நமக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று
ஒதுங்கிவிட்டனர். ஆந்திரம், தெலங்கானாவில் உயிரி அடையாள சரிபார்ப்பு
சிறப்பாக இருப்பதாக தேச அளவில் விளம் பரப்படுத்தப்பட்டது. அங்கேயே 8% முதல்
14% வரை யில் தோல்விகளும் குளறுபடிகளும் விடுபடல்களும் ஏற்படுகின்றன.
மாதந்தோறும் 25% ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் திரும்புகின்றனர்.
‘ஆதார்’
அடிப்படையிலான உயிரி அடையாளத்தால் (அப்பா) ஊழல் குறையாது என்பதை அரசு
இன்னமும் உணரவில்லை. ‘அப்பா’வால் ஊழல் குறையும் என்றால், இந்த
விடுபடல்களும்கூட இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஜார்க்கண்டில் இப்போதும்
பொதுவிநியோக ஊழியர்கள் மக்களுக்கு வழங்கும் உணவு தானியங்களில் சிறு
பகுதியை எடுத்துக்கொண்டு அளவு குறைவாகத்தான் கொடுக்கின்றனர். ஒரே பெயரில்
இரண்டு அட்டைகள் தரப்படுவதைத் தடுக்க ‘ஆதார்’ பயன்படலாம். ஆனால்,
ஒவ்வொருமுறையும் உயிரி அடையாளம் சரிபார்க்கப்படுவதால் நன்மை ஏதுமில்லை.
உடல் நலக்குறைவு அல்லது வயோதிகம் காரணமாகவோ அல்லது மாற்றுத்திறனாளிகள்,
வெளியூர்களில் வேலைக்குச் செல்வோர் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமோ
பொருள்களை வாங்க முடியாதபடிக்கு முடக்க இந்த ‘அப்பா’ காரணமாகிறது.
ஒவ்வொரு
மாதமும் பொது விநியோக முறை மூலம் ரேஷன் பொருட்களை வாங்க மக்கள் ஐந்து
அர்த்தமற்ற தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலாவது மின் விநியோகம்,
அடுத்தது செயல்படும் நிலையில் உள்ள பிஓஎஸ், இணையதளத் தொடர்பு, அடையாள
சரிபார்ப்புக்கான கணினி சர்வர்கள், கைவிரல் ரேகை சான்றுரைப்பு. இதில்
ஏதாவது ஒன்று தடைபட்டாலும் சில வேளைகளில் - மாதக்கணக்கில் கூட - ரேஷன்
பொருட்களை வாங்க முடியாமல் போகிறது. இதனால் பல குடும்பங்கள் பதற்றத்துக்கு
உள்ளாகின்றன.
பணமதிப்பு
நீக்க காலத்தில் நீண்ட நேரம் நீங்கள் வரிசையில் நின்று ஏடிஎம் அறைக்குள்
நுழையும்போது பணம் தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்பு வந்தால் உங்கள் மனநிலை
எப்படியிருக்கும், அதுதான் இந்த ‘அப்பா’ முறையால் ஏராளமான குடும்பங்களுக்
கும் ஏற்படுகிறது. ஏழைகள் பட்டினியால் வாடக் கூடாது என்பதற்காகக்
கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கத்தையே தோற்கடிப்பதாக இந்த
நடைமுறை இருக்கிறது. பல முறை சென்றும் வாங்க முடியாததால் பல குடும்பங்கள்
இந்தப் பொது விநியோ கக் கடைகளுக்கே வருவதில்லை. அவர்களைத்தான் ‘போலிகள்’
என்று அரசு கூறி மகிழ்கிறது.
‘அப்பா’ முறையைக் கைவிட வேண்டும். ‘ஸ்மார்ட்
கார்டு’ போன்றவை மூலம் பொது விநியோகப் பொருட்களையும் ஓய்வூதியங்களையும்
வழங்க வேண்டும். பொது விநியோக முறையைச் சீர்குலைக்க வேண்டும், ஏழைகளின்
வாழ்க்கையை மேலும் உருக்குலைக்க வேண்டும் என்று அரசே விரும்பினால், ‘அப்பா’
போன்ற தொழில்நுட்பங்களை மேலும் மேலும் கட்டாயமாக்கிக்கொண்டே போகலாம்!
©: ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி,

No comments:
Post a Comment