விவசாயக்கடன் வசூல் செய்யும் போது வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதால்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் உயிரிழந்தார். இதில்
வங்கி ஏஜெண்டுகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் வாசன்
கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரனை வங்கி ஏஜெண்டுகள்
தாக்கியதால் அவர் உயிர் இழந்திருக்கிறார். இது மிகவும் வேதனைக்குரியது.
வருத்தம் அளிக்கிறது. விவசாயி ஞானசேகரன் விவசாயம் செய்வதற்காக டிராக்டர்
வாங்குவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
தான் வாங்கிய வங்கிக்கடனுக்கான தவணையை தொடர்ந்து 4 ஆண்டுகள் செலுத்திய
பிறகு விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டதால் தற்போது அவரால் தவணையை செலுத்த
முடியவில்லை. விவசாயத் தொழில் சரிவர நடைபெறாமல், பாதிப்புக்கு உள்ளானதால்
இந்த விவசாயியால் தான் வாங்கிய வங்கிக்கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை
என்பது தான் உண்மை நிலை.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள் வங்கிக்கடனை
வசூல் செய்யும் விதமாக டிராக்டரை ஜப்தி செய்ய வங்கி ஏஜெண்டுகளை
அனுப்பியுள்ளனர். ஆனால் வசூல் என்ற பெயரில் விவசாயியிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த ஏஜெண்டுகள். இந்த
தாக்குதலில் பாதிக்கப்பட்ட அந்த விவசாயி திருவண்ணாமலையில் உள்ள அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை வசூல் செய்வதற்கு ஏஜெண்டுகளை அனுப்புவது
முறையல்ல. இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
முக்கியமாக
விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் விவசாயக் கடனை வசூல்
செய்ய கட்டாயப்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பதை
வங்கிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும்
உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு அதிகபட்ச இழப்பீட்டூத்தொகையை தமிழக
அரசு வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் நடவடிக்கையால் தற்போது
உயிரிழந்திருக்கின்ற விவசாயின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க
தமிழக அரசு முன்வர வேண்டும்.
இது போன்ற உயிரிழப்புகள் இனிமேல்
நடைபெறாமல் இருப்பதற்கு விவசாயக்கடன் வசூல் செய்யும் கெடுபிடி
நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது'' என்று
வாசன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment