ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை
உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த
அம்ருதா என்ற பெண்ணும் இதேபோன்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவர் தாக்கல்
செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இவர் ஏற்கெனவே, கடந்த
ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம்
எழுதினார். அதில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான
மகள் நான்தான். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க
உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
தற்போது, வழக்கும் தொடர்ந்துள்ளார்.
யார் இந்த அம்ருதா?
பெங்களூருவில் உள்ள பனசங்கரியை சேர்ந்த அம்ருதா (38).
இவர்
'தி இந்து'வுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த பேட்டியில், "மறைந்த தமிழக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் எனது தாய். நான் பிறந்த பிறகு என்னை தனது
சகோதரி சைலஜாவிடம், ஜெயலலிதா ஒப்படைத்தார். பெங்களூருவில் இருந்த சைலஜா -
சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். கடந்த 1996-ம்
ஆண்டு சைலஜா ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அதனை எடுத்துக்கொண்டு போயஸ்
கார்டனுக்குச் சென்றேன். என்னை பார்த்ததும் ஜெயலலிதா, மிகவும் பாசத்தோடு
நடந்துகொண்டார்.
அப்போது என்னிடம் ஜெயலலிதா, 'எக்காரணம் கொண்டும்
அரசியலுக்கும், திரையுலகிற்கும் வரக் கூடாது. எனது மகள் என யாரிடமும்
சொல்லக் கூடாது. பெங்களூருவிலேயே இருக்க வேண்டும்' என உறுதியாக கூறினார்.
என்னை வளர்த்த தாய் சைலஜாவும் அண்மையில் காலமானார். அடுத்த சில மாதங்களில்
ஜெயலலிதாவும் காலமானார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலமுறை சந்திக்கச் சென்றேன். சசிகலா
குடும்பத்தினர் என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி, ஜெயலலிதா
நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா
தாக்கப்பட்டதாலே இறந்தார்.
இது தொடர்பாக சசிகலா, இளவரசி, டிடிவி
தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா
பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும்.
நான் பிறந்தபோது லலிதா,
ரஞ்சினி உள்ளிட்டோர் ஜெயலலிதாவை தங்களது வீட்டில் தங்கவைத்து
பராமரித்துள்ளனர். நான் ஜெயலலிதாவின் மகள் என்பதில் சந்தேகம் இருந்தால்
அவரது உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும்" எனக்
கூறியிருந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தொடங்கிய சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது.
No comments:
Post a Comment