செயல்படாத தமிழக அரசால் மக்கள் உயிரும், உடமைகளும், உற்பத்தியும்
பறிபோகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட
அறிக்கையில், ''சென்ற ஆண்டு பருவமழை தவறியதன் காரணமாக தமிழகம் வறட்சியின்
கோரப் பிடியில் சிக்கியது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தும்,
அதிர்ச்சியாலும் மரணமடைந்தனர்.
விவசாயம் முற்றிலும் அழிந்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடும்
துன்ப துயரத்திற்கு ஆளாகி, அதனிலிருந்து விடுபட முடியாத நிலை இன்றளலும்
தொடர்கின்றது. இவ்வாண்டு பருவமழையை பெரிதும் எதிர்பார்த்த நிலையில் பருவ
மழையும் தொடங்கியுள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் பருவ மழை தொடங்கும்,
குறிப்பாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 27ல் தொடங்கும் என்று முன்னதாகவே
வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பருவ மழையை எதிர்பார்த்து, முன்
எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும்
அரசுக்குள்ளது.
தமிழகத்தில் மிக முக்கியத் துறையான மின்வாரியத்தில்
ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்தளவு ஊழியர்கள் மற்றும்
தொழிலாளர்களைக் கொண்டு முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாது. ஊழியர்
பற்றாக்குறை போதுமான அளவிற்கு கருவிகள் இல்லாத நிலையில் மனித உயிர்கள்
பலியாகி வருகின்றன.
கொடுங்கையூரில் பாவானா, யுவஸ்ரீ ஆகிய இரு
சிறுமிகள் விளையாடிய போது அறுந்து விழுந்துள்ள மின்கம்பி தாக்கி
பலியாகியுள்ளனர். அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதுடன்,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க
வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய
தினம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகம், மணலகரம் கிராமத்தைச்
சேர்ந்த கலிய பெருமாள் என்கிற விவசாயி, தன் வயலில் மழைநீரை வடிய வைக்க
சென்ற போது அறுந்து விழுந்துள்ள மின்கம்பி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர்
துறந்துள்ள துயரச் செய்தி வந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மின்
கம்பங்கள் பெருமளவு வயல்வெளிகளில் உள்ளன. கம்பங்கள் பழுதடைந்தும், மின்
கம்பிகள் மிகத் தாழ்வான நிலையில் தொங்கிய நிலையிலும் உள்ளது. இவைகள்
சரிசெய்யப் பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க படாதநிலையில் இத்துயர
சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மின் வாரியத்தில் உள்ள காலிபணி இடங்கள்
உடன் நிரப்பப் படுவதுடன், நீண்ட காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளவர்களை
நிரந்தரம் செய்யவும் தேவையான அளவிற்கு கருவிகள் வாங்கவும் உரிய நடவடிக்கை
எடுத்திடல் வேண்டும்.
மரணமுற்ற விவசாயி குடும்பத்திற்கும் ரூ.10
லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். பருவ மழை தொடங்குவற்கு முன்பு மராமத்து
பணிகள் மேற்கொள்ள அரசு பெருமளவு நிதி ஒதுக்கியது உண்மைதான். அவைகள்
நேர்மையான முறையில் செயல்படுத்த பட்டிருந்தால் இன்று டெல்டா மாவட்டங்கள்
பாதிக்கப்பட்டிருக்காது.
பாசன வடிகால்களை முறையாக தூர்வாராத
காரணத்தால், மழைநீர் தேங்கி பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலதாமதமாக மேற்கொள்ளப்பட்ட நேரடி விதைப்பின் மூலம் முளைத்த பயிர்களை
தட்டுக்கிளிகள் வெட்டி பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள், மீண்டும் உழுவடை
செய்து நேரடி விதைப்பின் மூலம் முளைத்த பயிர்கள் இன்று மழை நீர் வடியாமல்
முழ்கிய நிலையில் உள்ளது.
மாநில அரசு தனது சொந்த கட்சி விவகாரங்களில்
மட்டுமே கவனம் செலுத்திட வேண்டிய நிலையில், மக்கள் பிரச்சினைகைள் குறித்து
அக்கறையற்ற அரசாக, செயல்படாத அரசாக உள்ளதால் விலை மதிக்க முடியாத மனித
உயிர்கள் பறி போகின்றது. உற்பத்தி செய்த விவசாயம் சீரழிகின்றது. ஏழை, எளிய
மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக் குறியாகின்றது.
அரசு தங்களின்
சொந்த பிரச்சினைகளுக்கு காட்டும் அக்கறையை மக்கள் பிரச்சினைகளில் காட்ட
முன்வர வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment