உழவர்கள் குனிந்து குனிந்தே உங்களை தாழ்த்திக் கொண்டீர்கள் என்று
குற்றம் சாட்டுகிறேன். உங்களுக்கான தலைவரை தேடாதீர்கள். உங்களுக்குப் பணி
செய்ய ஒரு ஆளை நியமியுங்கள் என்று கமல் பேசினார்.
சென்னை அடையாரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
”நான், உழவன் மகன் இல்லை என்றாலும், உழவனின் மருமகன் என்று
சொல்லிக்கொள்கிறேன், அந்த உரிமையில் இங்கு வந்துள்ளேன். சினிமா இல்லாமல்
கூட இருந்துவிடலாம், ஆனால் உணவு, குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது.
ஜனநாயகத்தில் விவசாயிகள்தான் எஜமானார்கள். இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை,
சோறு சேகரிக்க வந்துள்ளேன்.
ஜனநாயகத்தில் நீங்கள்தான் எஜமானர்கள்
என்பதை மறந்து பணிவு காரணமாக அவர்கள் எஜமானர்களாக மாறி நீங்கள் சேவகர்களாக
மாறிவிட்டீர்கள்.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆனால் நான் உங்களை வாழ்த்த
வரவில்லை குற்றம் சாட்டத்தான் வந்திருக்கிறேன்.
நீங்கள் உங்களுக்காக
தலைவரைத் தேடாதீர்கள் உங்களுக்கு சேவை செய்ய ஒரு சேவகனை நியமியுங்கள். அது
கடமை அல்ல பொறுப்பு. உங்கள் நிலத்தில் வேலைக்கு ஆள் வைக்க வேண்டுமானால்
வேலை தெரியுமா, இதற்கு முன்னர் எங்கு வேலை செய்துள்ளீர்கள் என்று கேட்போம்
அல்லவா அது போன்றது தான் இதுவும். இதற்கு முன் என்ன செய்தார்கள் என்று
கேட்டு நியமியுங்கள். இதை அறிவுரையாக சொல்ல வரவில்லை நினைவுபடுத்துகிறேன்.
முன்னேற்றம்
என்ற போர்வையில் விவசாயத்தை அழித்து விடாதீர்கள். நீர் நிலைகள் பற்றி
பேசினால் டெல்லியில் ஒருவர் என்னை பொறுக்கி என்றார். ஆமாம், நான்
பொறுக்கிதான், அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும்
பொறுக்குவேன்.
என்னுடைய அறிவுத்தேடலில் நான் கண்டுபிடித்த விஷயம்
அமெரிக்காவில் அணைகளை எல்லாம் இடித்து வருகிறார்களாம். வண்டல் மண்ணை ஒரே
இடத்தில் தேக்கி வைக்கும் வங்கியாக அணைகள் மாறியதே அதற்கு காரணம். சுவிஸ்
வங்கி போல ஒரு இடத்தில் தேவை இல்லாமல் குவிந்தது. அவர்கள் அடுத்த
கட்டத்துக்கு போய் விட்டார்கள். ஊழல் செய்தால் சுட்டுக்கொள்ளும் அளவுக்கு
சென்றுவிட்டார்கள். அது அவர்கள் சட்டம் நாம் இங்கு நமக்கானதை தேட வேண்டும்.
நான் இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை சோறு சேகரிக்க வந்தேன். கேரளாவுக்கு
இங்கிருந்துதான் நாம் சோற்றை அனுப்புகிறோம்.
விவசாயத்தை
தொழிலாக்கினால்தான் நாம் வாழ முடியும். தமிழகமும், மராட்டியமும் தான் அதிக
வரி கட்டும் மாநிலங்கள். மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி
செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது நடக்கவில்லை''.
No comments:
Post a Comment