காங்கிரஸில் இணையும் திட்டம் இல்லை, அதேசமயம் அக்கட்சியின் துணைத்
தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
தொடர்பாக பேசத் தயாராக இருப்பதாக குஜராத் தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ்
மேவானி கூறியுள்ளார்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள
நிலையில், இவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ்
இறங்கியுள்ளது. ஷத்ரிய தாக்கூர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில்
இணைந்துள்ளார். படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேலை
காங்கிரஸ் கூட்டணியில் இணைவது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன்
பேச்சு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தலித் சமூக தலைவரான ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இதை மேவானி மறுத்துள்ளார்.
இதுகுறித்து
அவர் கூறுகையில் ''காங்கிரஸ் அல்லது வேறு எந்த ஒரு கட்சியிலும் இணையப்
போவதில்லை. எனினும் தலித் மக்களின் கோரிக்கையில் நான் உறுதியாக
இருக்கிறேன். போராட்டம் நடத்திய தலித் மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை
திரும்பப் பெற வேண்டும்.
கால்நடைகளின் தோலை உரிப்பது, மனிதக்
கழிவுகளை அள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் தலித் மக்களுக்கு வேறு
வேலை வாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம்
செய்வதற்கு தலித் மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இதுபோன்ற
கோரிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப்
பேசத் தயாராக உள்ளேன்" எனக் கூறினார்.
No comments:
Post a Comment