ஸ்டாலின் | கோப்புப் படம்.
நெல்லை தீக்குளிப்பு சம்பவத்துக்கு அதிமுக அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்காசி அருகேயுள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான
இசக்கிமுத்துவும் அவர் மனைவி சுப்புலட்சுமியும், 2 ஆண்டுகளுக்கு முன்
கந்துவட்டியில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்ததாகவும், இதுவரை
அவர் 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் திருப்பிச் செலுத்தியுள்ள நிலையிலும்,
அசல் அடைக்கப்படவில்லை என்று சொல்லி கந்து வட்டிக்காரர்கள் நெருக்கடி
தந்து, மேலும் மேலும் பணம் பறிக்க முயன்றதால், இதுகுறித்து காவல்துறையில்
ஆறுமுறைக்கு மேல் இசக்கிமுத்து புகார் தெரிவித்திருக்கிறார். மாவட்ட
ஆட்சித் தலைவரையும் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.
'பெற்ற மனம் பித்து' என்கிற இயல்பையும் மீறி,
மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிஞ்சுக் குழந்தைகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி,
தங்கள் மீதும் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ளும் அளவுக்கு இசக்கிமுத்து
குடும்பத்தினரை காவல்துறையின் அலட்சியம் வாழ்வின் இறுதிக்கே துரத்தி
அடித்திருக்கிறது.
சிகிச்சைப் பலனின்றி சுப்புலட்சுமியும் அவரது
பிள்ளைகளும் நேற்றே இறந்துவிட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில்,
தீக்காயங்களுடன் இசக்கிமுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்
என்பது இதயத்தை கசக்கிப் பிழிகிறது.
அதிமுக ஆட்சியில் மகளிர் சுய
உதவிக்குழுக்களை கட்சி வேலை செய்பவர்களாக மாற்றி, பொதுக்கூட்ட நிகழ்வுகளில்
கூட்டம் சேர்ப்பதற்கும், முதல்வர் வரும் வழியெங்கும் நின்று வரவேற்பு
கோஷம் போடுவதற்கும், தேர்தல் நேரத்தில் வீடு வீடாக சென்று ஓட்டுக்குப் பணம்
கொடுப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திய காரணத்தால், மகளிர் சுய
உதவிக்குழுவினரும், அவர்தம் குடும்பத்தினரும் தற்சார்பு அடையமுடியாமல்,
கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் அவல நிலைக்குள்ளாகினர்.
அதனால்
ஏற்பட்டுள்ள கொடூர விளைவுதான், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில்
நடந்த தீக்குளிப்புக் கொடுமை. கந்துவட்டி தடுப்புச் சட்டம் கடந்த 2003ஆம்
ஆண்டே நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றாலும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை
எடுக்கப்படுவதில்லை.
கந்து வட்டி கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு
ஒடுக்க, சரியான தலைமை இல்லாமல் இன்றைக்கு தமிழக காவல்துறை சிக்கி,
தவித்துக் கொண்டிருக்கிறது. நிர்வாகத் திறமையற்ற அரசால் காவல்துறை
நிர்வாகமும் சீர்குலைந்து இன்றைக்கு, அப்பாவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்
கொள்ளும் கொடூரம் அரங்கேறுகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்த அதேநாளில், சிவகாசியில் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வில், அவர்
கண்முன்பாகவே இரண்டு பெண்மணிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
ஆளத் தகுதியில்லாதவர்களின் ஆட்சியினால், மக்கள் வாழத் தகுதியில்லாத
மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இத்தகைய சம்பவங்கள்
எடுத்துக்காட்டுகின்றன.
நெல்லை தீக்குளிப்பு சம்பவத்துக்கு அதிமுக
அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தீக்குளிப்புக்குக் காரணமாக இருந்த,
நெல்லை மாவட்ட அலட்சிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்
ஆகியோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டோரின்
குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, மகளிர் சுய உதவிக்குழுக்களை
அரசியலுக்குப் பயன்படுத்துவதை கைவிட்டு, கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கான
நிதியுதவி உள்ளிட்ட பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்''
என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment