Latest News

வீடுகளுக்குள் கொசு புகை மருந்து அடிப்பதில் உலக சுகாதார நிறுவன விதிகளைப் பின்பற்றவில்லை: ஆஸ்துமா நோயாளிகளும், குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்

புதுப்பேட்டை பகுதியில் வீடுகளில் உள்ளோருக்கு எச்சரிக்கை விடுக்காமல், கொசுப் புகை மருந்து அடிக்கும் சென்னை மாநகராட்சி பணியாளர்.   -  படம்: ச.கார்த்திகேயன் 

சுகாதாரத் துறையும், சென்னை மாநகராட்சியும் உலக சுகாதார நிறுவன விதிகளைப் பின்பற்றாமல், வீடுகளுக்குள் கொசுப் புகை மருந்து அடிப்பதால், ஆஸ்துமா நோயாளிகளும், குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம், சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, புதுப்பேட்டை பகுதியில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டது. அப்போது, மாநகராட்சிப் பணியாளர்கள், கொசுப் புகை மருந்து அடிக்கும் விதிகள் எதையும் பின்பற்றாமல், எந்த வித எச்சரிக்கையும் செய்யாமல், திடீரென அப்பகுதியில் இயங்கி வந்த உணவகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள், கொசுப் புகையை அடித்தனர். இதனால் உணவகங்களில் இருந்த உணவு கள் பாழாயின. வீடுகளில் வசிப்போரை வெளியில் வரச்சொல்லாமல், வீடுகளுக்குள் புகை அடிக்கும் குழாயை நுழைத்து புகையை செலுத்தினர்.

நல்ல காற்றோட்டம்

உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ள, வீடுகளுக்குள் கொசுப் புகை அடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளில் கூறியிருப்பதாவது: கொசுப் புகை மருந்து அடிக்கும்போது, வீடுகளில் வசிப்போர் அனைவரும் (செல்ல பிராணிகள் உட்பட) வீடுகளுக்கு வெளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகை அடித்த 30 நிமிடங் களுக்கு பிறகு, வீடுகளுக்குள் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டதை உறுதி செய்தபிறகு, வீட்டினுள் செல்ல வேண்டும். புகை அடித்த பிறகு, 30 நிமிடங்கள் வரை, கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். புகை அடிப்பவர், வீட்டினுள் சென்று, பின்னோக்கியவாறு நகர்ந்து, புகை அடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, அந்த நேரத்தில் புகை அடிப்பவருக்கு நல்ல பார்வை கிடைக்கும்.

கொசுப் புகை அடிக்கும்போது, வீட்டின் தலைமை மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். சூடு ஏறும் வகையில் எதையும் இயக்கக் கூடாது. உணவு சமைப்பதையும் நிறுத்த வேண்டும். குடிநீர் தேக்கி வைத்துள்ள பாத்திரங்கள், உணவு உள்ள பாத்திரங்களைப் பத்திரமாக மூடி வைக்க வேண்டும். அதன் பின்னரே கொசுப் புகை அடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூர்க்கத்தனமாக...


ஆனால் சுகாதாரத் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இதை கடைபிடிக்கவே இல்லை. காலை 8 மணி அளவில், வீட்டினுள் இருப்பவர்கள் யாரையும் வெளியில் அழைக்கவில்லை. பணியாளர்கள், மூர்க்கத்தனமாக புகையை வீடுகளுக்குள் அடித்தனர். அங்கு குழந்தைகளோ, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் உடையவர்களோ இருந்திருந்தால், அவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்குள், சுருண்டு விழுந்திருப்பார்கள். இவை அனைத்தும் சுகாதாரத் துறை உயரதிகாரிகள், மாநகராட்சி உயரதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்தன.

சாத்தியமில்லை


இவ்வாறு சுவாசக் கோளாறு உள்ளவர்கள் பாதிப்படையும் வகையில், விதிகளை மீறி புகை அடிப்பது குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது, “ஏற்கெனவே, இன்றைய தினம், இப்பகுதியில் கொசுப் புகை அடிக்க இருப்பதாக ஒலிப்பெருக்கி மூலம் தெரிவித்துவிட்டோம். வீடு வீடாகச் சென்று, உங்களுக்கு சுவாசப் பிரச்சினை உள்ளதா என கேட்டு, புகை அடிப்பது சாத்தியமில்லை’’ என்றார்.

அனுமதிக்கப்பட்ட அளவில்...


பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, சென்னை மாநகர சுகாதார அலுவலர் செந்தில்நாதன் ஆகியோர் கூறும்போது, “இந்த புகையில் அனுமதிக்கப்பட்ட அளவில்தான் மருந்து உள்ளது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்றனர்.

சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட அளவா அது என்று கேட்டதற்கு, அவர்கள் பதில் அளிக்கவில்லை.

இதுதொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “டெங்கு தொடர்பான அடுத்த கூட்டத்தில், சுவாச நோய் உள்ளவர்கள் பாதிக்காத வகையில் கொசுப் புகை அடிக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.