
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோயில்
தொடர்பாக இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதற்கிடையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் மசூதி அமைய
வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு, அருகாமையில் முஸ்லிம்கள் அதிகமாக
வாழும் பகுதியில் புதிய மசூதி கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டும்
என ஷியா வாரியம் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த நிலையில், மற்றொரு மத நல்லிணக்க நடவடிக்கையாக ஒரு அறிவிப்பை அது
வெளியிட்டுள்ளது. சரயு நதிக்கரையின் ஓரத்தில் அமைக்கப்படும் 100 அடி உயர
ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க உத்தர பிரதேச மாநில இஸ்லாமிய
ஷியா வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
உ.பி., மத்திய ஷியா வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி, முதல்வர் யோகி
ஆதித்யாநாத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பகுதியை முன்னர் ஆண்ட நவாப்கள்
அயோத்தியில் உள்ள கோயில்களுக்கு மதிப்பு அளித்து வந்துள்ளனர். மத்திய
அயோத்தியாவில் உள்ள அனுமார் கோயிலுக்கு தேவையான நிலத்தை 1739ம் ஆண்டு நவாப்
ஷுஜா-உத்-தவ்லா நன்கொடையாக அளித்திருந்தார். 1775-1793 ஆண்டுகளுக்கு
இடையில் அங்கு கோயில் கட்டுவதற்கான நிதியை நவாப் ஆசிப்-உத்-தவ்லா
வழங்கினார்.
ராமருக்கு சிலை அமைக்கும் மாநில அரசின் முடிவு பாராட்டத்தக்கது. இந்த
முடிவு உலக வரைப்படத்தில் அயோத்தி நகருக்கு தனிப்பெருமை சேர்க்கும்.
ஒருமைப்பாட்டை உணர்த்தவும், ஷியா இனத்தவர்கள் ராமரின் மீது வைத்திருக்கும்
நன்மதிப்பின் அடையாளமாகவும் ராமர் சிலையில் உள்ள அம்பரா தூளிக்கான வெள்ளி
அம்புகள் பத்தை, பரிசாக அளிக்க ஷியா வாரியம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment