தினகரன் முகாமில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 6
எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் உற்சாகமாக வலம்
வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தினகரனின் 19 எம்.எல்.ஏக்களுக்கும்
எந்தவித மதிப்பும் இல்லை. அவர்களால் எந்தவித சிக்கலும் ஏற்படப் போவதில்லை,
நமக்குத் தேவையான பலம் சபையில் இருக்கும் என ஆதரவாளர்களிடம்
பேசியிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.
நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில், ஆட்சிக்கு
எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் வேலையில் அரசியல் கட்சிகள்
ஈடுபட்டுள்ளன. அதற்கு முன்னதாக, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட
வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறது தி.மு.க. காரணம். குட்கா
விவகாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் 21 பேரின் பலத்தைக் குறைத்தால்,
எடப்பாடி வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகிவிடும் என்பதற்காகவே,
துரைமுருகன், கனிமொழி, காங்கிரஸ் விஜயதரணி உள்ளிட்டவர்கள், அவசரமாக ஆளுநரை
சந்தித்துக் கோரிக்கை வைத்தனர்.
தினகரன் குரூப்புடன் பேச்சுவார்த்தை
இந்தக் கோரிக்கையின் மீது எந்தவித முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை.
இதையடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட இருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், எதிர்க்கட்சிகள்
யாரைச் சென்று சந்தித்தாலும், எங்கள் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
தினகரனின் 19 எம்.எல்.ஏக்களில் 10 பேரிடம் பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருக்கிறது.
குடும்பங்களுடன் பேச்சு
இந்த 10 பேரும் எங்கள் பக்கம் வருவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக்
கருத்தும் இல்லை. புதுச்சேரியில் அவர்கள் இருந்தாலும், அவர்கள் குடும்பம்
தொகுதிக்குள்தானே இருக்கிறது? எம்.எல்.ஏக்களின் குடும்ப உறவுகளிடம் தீவிர
ஆலோசனை நடந்து வருகிறது.
6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
காங்கிரஸ் தரப்பில் 6 எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
எம்.எல்.ஏக்களை சபைக்கு வராமல் பார்த்துக் கொள்ளும் வேலையை சீனியர்
அமைச்சர் ஒருவர் செய்து வருகிறார். சபை எண்ணிக்கையில் 100 எம்.எல்.ஏக்கள்
இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிடுவார்.
இரட்டை இலை முடக்கம் தொடரும்
அதை நோக்கி அமைச்சர்கள் சிலர் காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்றார்.
மேலும் இரட்டை இலை சின்னம் குறித்த விவாதமும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஓபிஎஸ்-இபிஎஸ் கையில் இரட்டை இலை கிடைத்துவிடக் கூடாது' என்பதில் தினகரன்
உறுதியாக இருக்கிறார். அவர்கள் கையில் இலையை ஒப்படைத்தாலும், கணிசமான
எம்.பி, எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் சசிகலா தரப்பும் சண்டைக்கு வரும்.
தினகரன் தரப்பில் நீதிமன்றம் சென்றால், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க
வேண்டிய சூழல் வரும். தற்போதைய நிலையில் இரட்டை இலையை முடக்கி வைப்பதையே
தேர்தல் ஆணையம் விரும்புகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் இரட்டை இலையைக்
கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர்
அதிமுகவினர்.
No comments:
Post a Comment