நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு
அவரை பரோலில் விட வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுனரிடம் மனு
அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்ற
நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 12ஆம் தேதியுடன்
முடிவடைய இருந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால்
கடந்த மே மாதம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் பேரில் அவரை கைது
செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் நீதிபதி கர்ணன்
தலைமறைவாகிவிட்டார். அதோடு தன் மீதான தண்டனையை பரிசீலனை செய்ய வேண்டும்
என்று 4 முறை உச்சநீதிமன்றத்தில் முறையீடும் செய்தார்.
ஆனால் நீதிபதி கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து
மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே கடந்த 19ம் தேதி கோவை
அடுத்துள்ள மதுக்கரை எனுமிடத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த
நீதிபதி கர்ணனை 2 எஸ்.பி-க்கள் தலைமையிலான கொல்கத்தா தனிப்படை போலீசார்
கைது செய்தனர்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்ட
முன்னாள் நீதிபதி கர்ணன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி
கர்ணனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பரோலில் விட வேண்டும் என்று
கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி கர்ணன் தரப்பு வழக்கறிஞர் மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத்
திரிபாதியிடம் மனுவை அளித்தார். நீதியை நிலை நாட்டவும், நியாயமாகவும்
விசாரித்து கர்ணனை பரோலில் வெளியில் விட வேண்டும் என்று கோரிக்கை
விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment