எம்எல்ஏக்கள் குதிரை பேர விவகாரம் சட்டசபையில் இன்று புயலைக்
கிளப்பியது. என்னதான் எதிர்கட்சியினரை சமாளிக்க தயாராக வந்தாலும்
ஆளுங்கட்சி எம்எல்ஏக்களிடையே ஒற்றுமையில்லாத காரணத்தால் புயலை சமாளிக்க
முடியவில்லை என்றே கூறலாம்.
சட்டைக்கிழிப்பு கிண்டல், தெர்மாகோல் முழக்கம் என கேலியும், கிண்டலுமாகவே
தொடங்கியது சட்டசபை. பரவாயில்லையே, சட்டசபை அமைதியா நடக்குதே என்று
நினைத்துக்கொண்டிருந்த போதே ஜீரோ அவரில் புயலை கிளப்பினார்
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்.
எம்எல்ஏக்களிடம் பண பேரம் நடந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின். ஆனால் அதற்கு
வழக்கம் போல அனுமதி மறுத்து விட்டார் சபாநாயகர் தனபால். இதனால் திமுக
எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர்.
ஆதாரம் கேட்ட சபாநாயகர்
வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து
அவையில் விவாதிக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சரவணனே
குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார். பத்திரிகை, தொலைக்காட்சிகளில்
வரும் செய்திகளை எல்லாம் விவாதிக்க முடியாது. கூவத்தூர் பேரம் தொடர்பாக
ஆதாரம் கொடுத்தால் விவாதிக்க அனுமதியளிக்கிறேன் என சபாநாயகர் தெரிவித்தார்.
அமளி துமளியான அவை
திமுகவினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. காவிரி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு
பிரச்சினைகள் அவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றனர். சபாநாயகர்
குறுக்கிட்டு அமைதி காக்குமாறு கோரியும் திமுகவினர் தொடர்ந்து அமளியில்
ஈடுபட்டனர்.
மானம் போச்சு
கையில் தயாராக வைத்திருந்த 'எம்எல்ஏக்கள் விற்பனைக்கு' என்று எழுதப்பட்ட
என்ற பதாகைகளை வைத்துக் கொண்டு முழக்கமிட்டனர். மானம் போச்சு... மானம்
போச்சு என்று முழக்கமிடவே, அமைதிகாத்து அவையை நடத்த ஒத்துழைப்பு தருமாறு
சபாநாயர் கேட்டுக்கொண்டார்.
வெளியேற்றம் மறியல்
ஆனாலும் திமுக எம்எல்ஏக்களின் முழக்கம் அதிகரிக்கவே, சபாநாயகர் தனபால்
ஒவ்வொரு எம்எல்ஏவின் பெயராக சொல்லி வெளியேற்றினார். வெளியேற்றப்பட்ட
எம்எல்ஏக்கள் நேராக சென்று சாலையில் அமர்ந்தனர். இதனால் போக்குவரத்து
ஸ்தம்பித்தது. மானம் போச்சே... மானம் போச்சே என்று முழக்கமிட்டனர்.
சட்டை என்னுது
மாப்பிள்ளை இவர்தான், ஆனால் சட்டை என்னுடையது என்பது போல இருக்கிறது சரவணன்
பேச்சு என்று கூறினார் ஸ்டாலின். வெயில் கொளுத்தினாலும் படையப்பா காமெடியை
உதாரணம் காட்டி பேசினார் ஸ்டாலின். சந்தடி சாக்கில் ஆட்சியை கலையுங்கள்
என்றும் கோரினார். இதனையடுத்து திமுக உறுப்பினர்களை கைது செய்தது போலீஸ்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்டனர்.
முதல்நாளே புயல்
மானியக்கோரிக்கை பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை
வைத்ததே எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்தான். 24 நாட்களும் பல்வேறு விதமான
மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். முதல்நாளே எதிர்கட்சியினர் புயலை
கிளப்பியுள்ளனர். நல்லா பிளான் பண்ணிதான் பண்றாங்கப்பா!
இனி வரும் நாட்களிலாவது அவை நல்லபடியா நடக்குமா?
No comments:
Post a Comment