சத்தீஸ்கரில் நக்சல்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த 4
சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் திருச்சி மற்றும் மதுரைக்கு
கொண்டுவரப்பட்டன.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்தார் பகுதியில் பர்கபால் -
சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில்
ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்ஸலைட்கள்,
சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் தமிழக வீரர்கள் 4 பேர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர்.
வீரமரணடைந்தவர்களில் சேலம் கெங்கவல்லியைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை
நல்லூரைச் சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த
செந்தில்குமார், மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகியோரும்
அடங்குவர்.
இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்
நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில்
செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் ஆகியோரது உடல்கள் திருச்சி
வந்தடைந்தன. அவர்களது உடல்களுக்கு திருச்சி ஆட்சியர் பழனிசாமி, திருவாரூர்
ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து அவர்களது
சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் மற்றொரு வீரரான அழகுபாண்டியின் உடலும் மதுரை விமான நிலையத்துக்கு
கொண்டு வரப்பட்டது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார்,
ஆட்சியர் ஆகியோர் வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து
அங்கிருந்து அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment