Latest News

  

நீண்ட நெடிய திராவிட குடும்ப உறவை தொடர்ந்திட வேண்டும்: ஸ்டாலின் யுகாதி வாழ்த்து

 
அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி திராவிடக் குடும்ப உறவு தொடர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள யுகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் புத்தாண்டுத் திருநாளான உகாதி திருநாளை (29.3.2017) முன்னிட்டு அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் அண்டை மாநில மக்களுடன் என்றைக்கும் அன்பும், பண்பும் மிக்க மனித நேய உறவை பேணி, பாதுகாத்து வருகிறார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. அந்த பாரம்பரிய திராவிட வரலாறு என்றைக்கும் தொடரும் என்ற உறுதியுடன், இந்த உகாதி திருநாளை அனைவரும் அகமகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அண்டை மாநிலங்களுக்குள் அருமையான நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் பதினெட்டு ஆண்டு காலம் மூடிக்கிடந்த அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை பெங்களூரிலும், கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் அவர்களின் சிலையை சென்னை மாநகரிலும் பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு கண்டு, திறந்து வைத்த ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். 2001-ல் அதிமுக அரசு ரத்து செய்த உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை மீண்டும் 2006-ல் கழக அரசு அமைந்தவுடன் நடைமுறைப்படுத்தியதை தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் என்றும் மறவார்கள். அதுமட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்குரிய பாட நூல்களை தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமே தயாரித்து வழங்கி தெலுங்கு, கன்னட மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு என்பதை சுட்டிக்காட்டும் இந்தவேளையில், திராவிட முன்னேற்றக் கழகம் பிறமொழிகள் பேசும் அனைத்துத் தரப்பு மக்களையும் தனது உடன்பிறப்புகளாகவே கருதி அரவணைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் பேரியக்கம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை அன்பான உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, அண்டை மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி, வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, இந்த நீண்ட நெடிய திராவிட குடும்பத்தின் உறவை தொடர்ந்திட வேண்டும் என்று அனைவரையும் இந்த உகாதி திருநாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.