மெரினாவில் போலீசாரின் கெடுபிடியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும்
மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் சமுதாய கூடத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாலையில் அவர்கள்
விடுவிக்கப்பட்டனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு புரட்சியைப் போன்ற
மேலும் ஒரு போராட்டத்தை நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்
மூலமாக தகவல் பரப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முதல் சென்னை மெரினாவில் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை
அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஷோபன் ராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த
விக்னேஷ் ஆகியோர் சென்னை மெரினாவில் போலீசாரின் கெடுபிடியையும் தாண்டி
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து
சென்னை மெரினாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முயன்ற மேலும்
25 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மயிலாப்பூர் சமுதாய
கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாலையில் மெரினாவில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களும்,
இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மெரினாவில் பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கோவை, திருச்சி, மதுரையில்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம்
முழுவதும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment