சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே
அக்கறை கொண்டுள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுவதாகவும் எம்ஜிஆர் அம்மா பேரவை செயலாளர் தீபா
குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம்
தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 62 வேட்பாளர்கள் களத்தில்
உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்களான திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ்,
அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி
அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன், சிபிஎம் சார்பில்
போட்டியிடும் லோகநாதன் ஆகியோர் சுட்டெரிக்கும் வெயிலிலும் கடும்
பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் தீபா அனல் பறக்கும் பிரச்சாரத்தைத்
தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம்
மேற்கொண்ட தீபா மக்களிடையே பேசுகையில், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அக்கறை கொண்டுள்ளதாக கூறினார். டிடிவி
தினகரனும், மதுசூதனனும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும்
குற்றம்சாட்டினார்.
மேலும், ஆர்.கே.நகரில் கோயில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள
மதுக்கடைகள் அகற்றப்படும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்
வகையில் ஆர்.கே.நகரில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் எண்ணிக்கை
அதிகரிக்கப்படும் என்றும் கூறிய தீபா, ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுவதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment